Senthil Arumugam's blog

Monday, May 15, 2006

நாட்டின் இன்றைய நிலை என்ன?

1. நாட்டின் இன்றைய நிலை என்ன?

1.1. அரசு பணிகள், சேவைகளில் தரமின்மை; அரசு அலுவலகங்கள், திட்டங்களில் லஞ்சம்,ஊழல், காலதாமதம்,நடைமுறைகளில் எளிமையின்மை போன்றவற்றை அரசாங்கத்தின் பிரிக்கமுடியாத கூறுகள் என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம். குறிப்பாக அரசியல்வாதிகளின் போலித்தன்மையையும், பொறுப்பின்மையையும், சுயநலச் செயல்பாடுகளையும் சகித்துக் கொள்ளப் பழகிக் கொண்டோம்.

1.2.அரசாங்கமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். எங்கள் பணி வேடிக்கை பார்ப்பதும்,விமர்சனம் செய்வதும் மட்டுமே என்ற மனோபாவம் பெரும்பான்மையான மக்களின் மனத்தில் ஆழ வேரூன்றிவிட்டது.

1.3.சின்னத்திரை,சினிமா,அர்த்தமில்லாத-அரட்டை அரசியல் போன்றவற்றில் தேவைக்கதிகமான ஈடுபாட்டைக் காண்பிக்கிறோம்; நேரத்தைச் செலவிடுகிறோம்; திரை நட்சத்திரங்களை வானத்து நட்சத்திரங்களாகப் பாவித்து வியந்து,போற்றி வணங்குகிறோம்.

( அப்படி என்றால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லவில்லையா ? நாட்டின் பொருதாரம் பெருகவில்லையா? இலட்சக்கணக்கான கணிப் பொறி வல்லுனர்களுக்கு வேலை கிடைத்துள்ளதே இது எதைக் குறிக்கிறது? என்ற கேள்விகள் நியாயமானவையே..... நம் கவனம், அக்கறை எல்லாம், மேற்சொன்ன பிரச்சனைகளையும், சிக்கல்களையும் வைத்துக் கொண்டே நம்மால் இவ்வளவு முன்னேற்றமடைய முடியும் போது, அந்தப் பிரச்சனைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதன் மூலம், சீர்திருத்தம் செய்வதன் மூலம் நாம் எவ்வளவு முன்னேற்றமடைய முடியும் என்பதுதான். Our work is ' Expediting the Progress.... In other words ' Removing the hurdles for development.'. )

2. இதன் விளைவுகள்?

2.1.கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை வசதியின்றி வறுமையில் வாழ்கின்றனர். தங்கள் கண்மணிகளான குழந்தைகளை படிக்கும் வயதில் வேலைக்கு அனுப்பிக் கொண்டுள்ளனர்.

2.2.பள்ளி,கல்லூரிகள், தொழிற்பயிற்சிக் கூடங்கள் நம்முள் இருக்கும் தனித்திறன்களை மேம்படுத்த உதவாததால், கற்ற கல்வி நடைமுறை வாழ்க்கைக்கும் உதவவில்லை; சுயதொழிலுக்கும் நம்மைத் தயார்படுத்தவில்லை; இருக்கின்ற வேலைகளுக்குத் தேவையான தகுதிகளையும் தரவில்லை. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கை கிடைக்காமல் சராசரி வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.

2.3.நாட்டின் ஆதாரத் தொழில்களான விவசாயம், சிறு தொழில்கள் போன்றவை லாபம் தரும் தொழில்கள் இல்லை என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. சிறு,குறு விவசாயிகள் கடன் தொல்லையால் அவதிப்படுவதும், நகரங்களுக்கு இடம் பெயருவதும்; சிறுதொழிற் கூடங்கள் மூடப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

2.4.புதிய புதிய ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் பட்டம் பெறுவதற்கான சடங்குகளாவும், அலுவலக வேலையாகவும் உள்ளனவே தவிர தனிமனித வளர்ச்சிக்கோ அல்லது நாட்டின் வளர்ச்சிக்கோ உதவுவதாக இல்லை.3. இந்த அவலநிலையை மாற்ற முடியாதா? 'முடியும்' என்ற நம்பிக்கை வைப்பதே மாற்றத்திற்க்கு முதல் படி.

சரி நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் படிதான் என்ன?

' என்னுடைய முன்னேற்றத்தையும், ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு :

' நேர்மை நெறிகளோடு வாழ்க்கை நடத்துவேன்; நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வேன் என்ற சங்கல்பமும்(மன உறுதியும்)- ஜனநாயக அமைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு பார்வையாளர் என்ற நிலையிலிருந்து முன்னேறி பங்கேற்பாளர் என்ற நிலையில் செயல்படுவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவேன் என்ற நிலைப்பாடும்தான்....." நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல்படி.

4. என்ன செய்யலாம் ?

நல்லதொரு சமுதாய, அரசியல் மாற்றம் வராதா என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு சமுதாய, அரசியல் மாற்றமும் ஒத்த எண்ணமுள்ள மக்களின் கூட்டுமுயற்சியால்தான் சாத்தியமாகும். அப்படிப்பட்ட ஒத்த எண்ணமுள்ள மக்களின் கூட்டுமுயற்சிக்கு ஒரு தளம்(platform/organisation) அவசியம். இந்த தளத்தை அடிப்படையாக வைத்து ஒத்த எண்ணமுள்ள நாமனைவரும் இணைந்து இயங்குவது அதைவிட அவசியம். இந்த தளத்தை இப்போதைக்கு ' மக்கள் இயக்கம்' என்று அழைப்போம்.


5. மக்கள் இயக்கத்தின் நோக்கம் ?

பொருளாதாரபலமும், நேர்மை நெறிகளும், சமூக நீதியுமுடைய சமுதாயமாக நமது நாடு மாற வேண்டும்.

அதற்கு ' இலஞ்ச-ஊழலற்ற(Corruption free)
திறமையான( Efficient)
வெளிப்படையான,(Transparent)
மக்கள்-நண்பனான(People Friendly)
மக்களை வளர்ச்சியடையச் செய்வதிலும்( Development oriented)
சுயச்சார்படையச் செய்வதிலும் அக்கறையுள்ள, ( Empowerment/self-reliant oriented)
மக்கள் பங்கேற்புள்ள ( People participative )
அரசு மிக அவசியமாகிறது. ( Government )

அப்படிப்பட்ட ஒரு அரசை அமையச் செய்வதுதான் மக்கள் இயக்கத்தின் நோக்கம்.

6. மக்கள் இயக்கத்தின் அணுகுமுறை?

6.1 உள்ளாட்சி மன்றங்களை வலுப்படுத்துதல்

6.2 சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் முறையாகச் செயல்படுத்தப்பட வழிவகுத்தல்

6.3 விவசாயம், கல்வி, தொழில் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சி குறித்த மக்களின் பார்வையையும், அணுகுமுறையையும், திட்டங்களையும் வெளிக்கொணர்தல், தொகுத்தல், பரவச்செய்தல்.

6.4 அரசியல் கட்சிகள், தேர்தல், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவும், திறமையுடையதாக்கவும் தேவையான சிந்தனைகளையும், திட்டங்களையும் மக்களிடமிருந்து திரட்டுதல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.

6.5 மக்களின் நல்வாழ்வை, வளர்ச்சியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்போது அந்த நிகழ்வைப் பற்றிய முழுவிவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நியாயத்திற்கும் துணைநிற்றல்.

6.6 மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றிய சமூகத் தணிக்கைக்கு(Social \naudit) ஏற்பாடு செய்தல்

6.7 பத்திரிக்கை நடத்துதல்

7. மக்கள் இயக்கத்தின் செயல் திட்டங்கள் ?

7.1 உள்ளாட்சி மன்றங்களை வலுப்படுத்துதல்:

7.1.1 உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கச் செய்தல்
7.1.2 உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் அதிகரிக்கச் செய்தல்
7.1.3 உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு தகுந்த பயிற்சி அளித்து அவர்களின் சீரிய செயல்பாட்டுக்கு துணைநிற்றல்
7.1.4 கிராம ஊராட்சிகள் தவிர்த்து மற்ற உள்ளாட்சி மன்றங்களில்( சிறப்பு கிராம ஊராட்சிகள், நகர பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள்) 'கிராம சபைக்கு' ஒப்பான 'மக்கள் பங்கேற்புக்' கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துதல், மக்களிடம் சிந்தனையைப் பரப்புதல்

7.2. சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் முறையாகச் செயல்படுத்தப்பட வழிவகுத்தல்:

7.2.1 MLA, MP க்களின் உண்மையான பணிகள் என்ன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரவச்செய்தல்

7.2.2 MLA, MP க்கள் சிறப்பாகச் செயல்பட உதவுதல், ஒத்துழைத்தல்

7.2.3 MLA, MP யின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், விமரிசித்தல்

7.2.4 MLA, MP க்கள் மக்களை சந்திக்கும்படி நிர்பந்தித்தல். குறிப்பாக சட்டசபைக்குச் செல்லுமுன்னரும், சட்டசபை முடிந்த பின்னரும்

7.2.5 தேர்தல் காலங்களில் MLA, MP க்களின் செயல்பாடுகளை நடுநிலையோடு மதிப்பிடல், விமரிசித்தல்

7.2.6 MLA, MP களுக்குக் கொடுக்கப்படும் 'தொகுதி வளர்ச்சி நிதி' எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் அறியச் செய்தல். 'தொகுதி வளர்ச்சி நிதி' தேவையா என்பது பற்றிய விவாதத்தை ஏற்படுத்துதல்.

7.3 சமுதாய வளர்ச்சி குறித்த மக்களின் பார்வையையும், அணுகுமுறையையும், திட்டங்களையும் வெளிக்கொணர்தல், தொகுத்தல், பரவச்செய்தல் மற்றும் அரசாங்கத்திடம் முன்வைத்தல்:

7.3.1 விவசாயம், கல்வி, தொழில் போன்ற துறைகளில் அனுபவமுள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களும் பொதுமக்களும் சந்தித்து விவாதிக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தி அதன் மூலம் அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கான சிந்தனைகளையும், திட்டங்களையும் திரட்டி, மக்களின் சார்பில் அரசாங்கத்திடம் முன்வைப்பது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.

7.4 அரசியல் கட்சிகள், தேர்தல், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவும், திறமையுடையதாக்கவும் தேவையான சிந்தனைகளையும், திட்டங்களையும் மக்களிடமிருந்து திரட்டுதல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.

7.4.1 இலஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கும் அரசியல் கட்சிகளின் நடைமுறைகள், தேர்தல் நடைமுறைகள், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட, சீர்திருத்தப்படத் தேவையான சிந்தனைகளையும், திட்டங்களையும் மக்களிடமிருந்து திரட்டி, மக்களின் சார்பில் அரசாங்கத்திடம் முன்வைப்பது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்தச் சிந்தனைகளைப் பரப்புதல்.

7.5 மக்களின் நல்வாழ்வை, வளர்ச்சியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்போது அந்த நிகழ்வைப் பற்றிய முழுவிவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நியாயத்திற்கும் துணைநிற்றல்.

7.6 மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றிய சமூகத் தணிக்கைக்கு(Social audit) ஏற்பாடு செய்தல்

7.6.1 சமூகத் தணிக்கைக்கு என்பது மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நிகழ்வு . திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் இது உதவும்.

7.7 பத்திரிக்கை நடத்துதல்

8. மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை எப்படி மக்களிடம் எடுத்துச் செல்லப்போகிறோம் ?

8.1. இணையத்தளப் பத்திரிக்கை
8.2. பத்திரிக்கை ( print magazine )
8.3. கலைக்குழுக்கள் மூலம்
8.4. குறும்படங்கள் திரையீடு
8.5. விழிப்புணர்வுக் கூட்டங்கள்
8.6. விழிப்புணர்வுப் பிரசுரங்கள் வெளியீடு
8.7. மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல் ( துறை சார்ந்த சிந்தனை, விவாதத்திற்கான கூட்டம் )
8.8. பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதுதல்
8.9. இணையதளம்
8.10 ஈ-மெயில் Groups
8.11. கருத்தரங்குகள்
8.12. பள்ளி, கல்லூரிகளில் கூட்டங்கள் நடத்துதல்
8.13 நடை பயணங்கள்
8.14 உண்ணாவிரதம்

9. மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி ஆதாரம் ?

9.1. பத்திரிக்கையின் சந்தாதாரரை அதிகரித்தல்
9.2. இயக்கத்தின் உறுப்பினர்களை அதிகரித்தல்
9.3. நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்துதல்
9.4. ஒத்த கருத்துடைய தொழிலதிபர்கள், நிதி வசதி உடையோரிடமிருந்து நன்கொடை பெறுதல்
9.5. இயக்கத்தின் பிரசுரங்கள், குறும்படங்கள் மூலம் நிதி திரட்டுதல்

- செந்தில் ஆறுமுகம், நந்தகுமார், சிவசங்கர்
10-05-2006