Senthil Arumugam's blog

Tuesday, June 10, 2008

மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்

மதுவிலக்கும் - மக்கள் சக்தி இயக்கமும்

'மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று ஒருபுறம் மதுப்புட்டிகளில் எழுதிவிட்டு 2007-08ல்ரூ.8800 கோடி வருமானத்தை மதுவிற்பனையிலிருந்து பெற்றிருக்கிறது தமிழக அரசு. 2008-09ல் இது ரூ.10 ஆயிரம்கோடியாக உயரவுள்ளது. இது மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.

இலட்சக்கணக்கானஏழைத்தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு, பெண்கள்-குழந்தைகளின் நலவாழ்வு-உரிமையையும் பறிக்கிறது மது.மக்களின் நலவாழ்வைவிட அரசாங்கத்தின் வருமானம்தான் முக்கியம் என்கிறது அரசு. இளைய தலைமுறையினர்மதுவில் மூழ்கிவிடாமால் காப்பாற்றப்பட வேண்டியதை மக்கள் சக்தி இயக்கம் ஒரு முக்கியமானதொரு பணியாகக் கருதுகிறது.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவருக்கே சேதாரம் என்றால்??

பல்வேறு சமூகக் கொடுமைகளுக்குக் காரணமாகஇருக்கும் மதுவை படிப்படியாகக் குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டுவருவது மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கியமானதொரு கொள்கை. ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்துவைத்துவிட்டு, மது குடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதுஎடுபடாது. எனவே மது குறித்து அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் மதுப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.அரசு அத்தகைய கொள்கை முடிவெடுக்க இது பெரும்பாலான மக்களின் கோரிக்கை என்பதை அரசுக்கு உணர்த்தவேண்டும்.மதுவிலக்கிற்கு ஆதரவான மக்களின் சக்தியை ஒன்றுதிரட்டும் பணியில் தீவிரமாய் களமிறங்கியுள்ளது மக்கள் சக்தி இயக்கம்.

நாட்டு நலனில் அக்கறையுள்ள உங்களைப் போன்றோரின் ஆதரவை வேண்டுகிறோம். For Contact : 9443119564, 044-24421810

மதுவிலக்கு குறித்த இயக்கத்தின் செயல்பாடுகள்,கருத்துகள்:

செயல்பாடுகள்:

ஜீன் 22,2008 - மதுரையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
மே 31, 2008 - சென்னையில் மதுவிலக்கு ஆர்வலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
ஏப்ரல் 27,2008 - உண்ணாவிரதப் போராட்டம் - கைது

கட்டுரைகள்:


1. மதுவிலக்கு வரலாறு

2. மதுவிலக்கு மாயையா?
-கலைஞர் கட்டுரைக்கு மறுப்பு

Tuesday, December 18, 2007

Educational Loan

Educational Loan

Story of a first generation girl student entering college.
Educational loan was denied to her because of poor marks in +2 ......

http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/dec07/Kalvi-Kadan-Article.pdf

Thursday, December 06, 2007

Thoguthi Sabai for MLA and MPs

Our democracy is called as "Representative democracy". ie, we elect MLAs and MPs and send them to Assembly and Parliament to speak onbehalf of us. But how do they get people's opinion. so far there is no defined process.

This article presents put forth a process for that:

http://makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Thoguthi_Sabai_Article_June2007.pdf

Reservation History

Monday, November 26, 2007

காமராஜர் ஆட்சி

தமிழகத்தின் பொற்காலம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காமராஜரின் 9.5 ஆண்டுகால(1954-1963) சாதனைகளின் தொகுப்பு... கல்வி,விவசாயம்,தொழில்துறை எனஅனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்த காமராஜரின் ஆட்சி ஒரு முன்னுதாரண ஆட்சிஎன்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது. ஆதலால்தான், தமிழகத்தில் "நல்லாட்சி" என்பதும் "காமராஜர் ஆட்சி" என்பதும் ஒரே அர்த்தத்தில் பொருள்கொள்ளப்படுகிறது.

http://www.makkalsakthi.org/Nammal_Mudiyum/Senthil/Kamarajar_Aatchi_July2007.pdf

Thursday, May 03, 2007

மனமிருந்தால் மார்க்கமுண்டு : தமிழக மதுவிலக்கு வரலாறு



மதுவிலக்கு சாத்தியமா? என்கிற விவாதம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஆளும் கட்சியான தி.மு.கவிற்கும் பட்டிமன்றம் போல் பரபரப்பாக நடந்துவருகிறது.

பக்கத்து மாநிலங்களில் மது விற்பனையாகிறது; கள்ளச்சாராயம் பெருகிவிடும்; மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும் போன்ற அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லி மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிறது தி.மு.க ?

மதுவிலக்கு சாத்தியமே. 6 மாதம் போலீஸ் துறையை எங்களிடம் கொடுத்துப் பாருங்கள் செய்து காட்டுகிறோம்; குஜராத்தில் மதுவிலக்கு அமுலில் இருந்தும் மக்கள் நலத்திட்டங்கள் நன்றாகத்தான் நிறைவேற்றப்படுகிறது என்கிறது பா.ம.கா.

மதுவிலக்கு சாத்தியமா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லுமுன்னர் இன்று ஏன் இது விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது என்ற கேள்வி பலருள் எழலாம். ஏதோ உடலுழைப்புத் தொழிலாளிகள் களைப்பு தீர கொஞ்சம் குடிக்கிறார்கள். இதனால் என்ன "குடியா முழுகிப் போகிறது" என்று கூட சிலர் கேட்கலாம். இப்படிக் கேட்பவர்களுக்கு இந்த புள்ளிவிவரம் பிரச்சனையின் ஆழத்தைப் புரியவைக்கும்.

1983ல் மதுபான விற்பனை ரூ.139 கோடி.
2005-2006ல் மதுபான விற்பனை ரூ.7335 கோடி.
22 வருடங்களில் 52 மடங்கு வளர்ச்சி.
வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு வளர்ச்சி.

குடி முழுகித்தான் போய்விடுமோ என்ற கவலை வருகிறதுதானே?

சரி... என்னதான் செய்வது ?

மதுவிலக்கு என்பது இன்றோ, நேற்றோ பேசப்படும் விஷயமல்ல. கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான இந்த விஷயத்தில் வரலாறு என்ன சொல்கிறது என்று பார்த்தால் நமக்கு புதிய வழிகள் புலப்படும். மதுவிலக்கு வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

மதுவினால் ஏற்படும் சமூகப்,பொருளாதார பாதிப்புகளை உணர்ந்த காந்தியடிகள் சுதந்திரப்போராட்டத்தின் முக்கிய அங்கமாக, கள்ளுக்கடை மறியலை முன்னிறுத்தினார். நிர்மாணத்திட்டத்திலும் இது முக்கிய இடம் பெற்றது. 1931ல் அன்றைய சென்னை மாகாணத்தில் நடந்த 9000 சாராயக்கடைகளுக்கான ஏலத்தில் 6000த்திற்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுக்க ஆட்கள் வரவில்லை என்பதிலிருந்து காந்தியடிகளின் பிரச்சாரம் எந்த அளவிற்கு மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை உணரலாம். மதுவால் அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்கள் என்பதால், அவர்களின் தலைமையிலேயே மதுவிலக்கு பிரச்சாரம் நடத்தப்படவேண்டும் என்ற யுக்தி நல்ல பலனைப் பெற்றுத் தந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் எப்போது நிறுத்தப்படும் என்று நிருபர்கள் கேட்டதற்கு அண்ணல் காந்தியடிகள் "...அது ஈரோட்டிலிருக்கும் கண்ணம்மையையும், நாகம்மையையும் கேட்கவேண்டும்" என்றார். நாகம்மை பெரியாரின் துணைவி. கண்ணம்மை பெரியாரின் சகோதரி.

மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது சொந்த தோட்டத்தில், அரசு அனுமதியின் பேரில் கள் இறக்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். துணைவியார், சகோதரி, பெரியார் என்று ஒட்டு மொத்த குடும்பமே மதுவிலக்கிற்காகப் பாடுபட்டது.

காந்தி வழி வந்த இராஜாஜி, 1937இல் தமிழக முதலமைச்சராகப் பெறுப்பேற்றதும் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவந்தார். முதன்முதலில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டது. அப்போதைய கவர்னர், மதுவிலக்கை அமுல்படுத்தினால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும்; அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்தார். அப்போதும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்று யோசித்தாரே தவிர மதுவிலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப்பிறகு "விற்பனை வரி" என்ற புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது குடிப்பழக்கம் நின்று போனால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும். அதனால் மக்களின் வாங்கும் சக்தி பெருகும். இதனால் விற்பனை வரி வசூலும் அதிகரிக்கும் என்பதுதான் திட்டம். இன்னும் சொல்லப்போனால், 1917ல் ராஜாஜி அவர்கள் சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோதே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து மதுக்கடைகளை மூடவைத்தார். மதுவிலக்கிற்கு சிறப்புச் சட்டம் எதுவும் இல்லாத காலகட்டத்திலேயே அவரால் இதனைச் செய்யமுடிந்தது. மனமிருந்தால் மார்க்கமுண்டு சொல்லிக்கொண்டு மட்டும் இருந்துவிடாமல் செய்தும் காட்டினார். இரண்டம் உலகப்போரின் காரணமாக 1939ல் இராஜாஜி அரசு பதவி விலகியதும் ஆங்கிலேயர் ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.

1945ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மதுவிலக்கை அமல்படுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சி 1946ல் தொடங்கி 1949 வரையில் தொடர்ந்து செயல்பட்டு நான்கு கட்டங்களில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இந்த அரும்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது ஓமந்தூர்.ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான அரசாங்கம்.

தொடர்ந்து வந்த காங்கிரஸ் முதலமைச்சர்கள் இராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சியில்(1967 வரை) பூரண மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது.

1967ல் அண்ணா தலைமையிலான தி.மு.க. அணி ஆட்சியைப் பிடிக்கிறது. மதுவிலக்குக் கொள்கையின் தீவிர ஆதரவாளரான அண்ணா அவர்கள் பூரண மதுவிலக்கை தொடர்ந்து அமல்படுத்தினார். 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில்

"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதோடு நின்றுவிடாமல் மற்ற மாநிலங்களிலும் இது அமலுக்கு வரவேண்டும் என்று விருப்பப்பட்ட அண்ணா அவர்கள் அதே மாநாட்டில்

".....மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான திரு.காமராஜ் அவர்களுடனும் திரு.பக்தவத்சலம் அவர்களுடனும் கை கோர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுவோமென்றால் அந்த நாள் பொன்னாள். இந்த நல்ல முயற்ச்சிக்குஅந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் இசைவைத் தெரிவிப்பார்களானால் நான் பிரச் சாரம் செய்வது மட்டுமல்ல மதுவிலக்கை ரத்து செய்துள்ள மாநிலங்களில் சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து மதுவிலக்கை அமுல்படுத்தக் கேட்டுகொள்வோம். இம்முறையில் நமக்குச் சிறைத் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்." என்று அறைகூவல் விடுத்தார்.

1969ல் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டதை காரணம் காட்டியும், மாநிலத்தின் நிதி நிலைமையைக் காரணம் காட்டியும் மதுவிலக்கை ரத்து செய்து கோவையில் 1971ல் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1946லிருந்து 25 ஆண்டுகள் அமலில் இருந்த "மதுவிலக்கு" 1971ல் ரத்து செய்யப்பட்டது. கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால், 1974 இறுதியில் தமிழ்நாட்டில்
மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் படிப்படியாக மதுவிலக்கைத் தளர்த்தி கள்ளுக்கடைகள், குறைந்த போதையூட்டும் சாராயம், இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் பர்மிட் வைத்திருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையும் சரிவர செயல்படுத்த முடியாததால், மீண்டும் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த விரும்பி கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை முழுமையாக மூடினார். IMFL மட்டும் விற்பனை செய்யும் முறையை அமல்படுத்தினார்.

1987ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் "மலிவு விலை மதுவை" தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

1991ல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் "மலிவுவிலை மதுக்கடைகளை" மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டு தன் ஆட்சியைத் தொடங்கினார். அன்றிலிருந்து அக்டோபர் 2003 வரை இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) தனியார் பிராந்திக் கடைகள் மூலம் விற்கப்பட்டு வந்தன. தனியார் கடைகளை ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் பிராந்திக் கடைகளையும் அரசே(டாஸ்மாக்) எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 2003லிருந்து இன்று வரை இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனம் பிராந்திக் கடைகளை எடுத்து நடத்த ஆரம்பித்த பிறகு அரசுக்கு வரும் வருவாய் 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறது அரசு. மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு சாராய வியாபாரம் சக்கை போடு போட்டு வருகிறது தமிழகத்தில். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை விட டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை இருமடங்கு என்றால் டாஸ்மாக்
எந்தளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். காமராஜர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிகள் தொடங்கிய பெருமை பெற்றது போல் ஊர் தோறும் மதுக்கடைகள் திறந்த புண்ணியம்(!) செல்வி ஜெயலலிதாவைச் சேரும்.

இன்று பூரண மதுவிலக்கையும் செய்யாமல், தென்னை,பனைத் தொழிலாளிகளுக்கு நல்லதொரு தொழில் வாய்ப்பான கள்ளையும் தடை செய்திருக்கும் அரசின் இரட்டை நிலை நம்மை கவலையடையச் செய்கிறது.

ஆக, காந்தி தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் மதுவிலக்கிற்காக பாடுபட்டவர்கள் அனைவரும் மதுவை ஒரு பொருளாதார விஷயமாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு புத்தகம் திறக்கப்படும்போது சிறைச்சாலைக் கதவு ஒன்று மூடப்படுகிறது என்பார்கள். அதுபோல மதுப்புட்டி ஒன்று திறக்கப்படும்போது சமுதாயப் பிரச்சனை ஒன்று தலையெடுக்கிறது என்ற புரிதலோடுதான் பார்த்தார்கள். குறிப்பாக இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் என்பதனை உணர்ந்து எப்பாடு பட்டேனும் மதுவிலக்கை அமல்படுத்தித்தான்
தீரவேண்டும் என்ற மன உறுதியோடுதான் செயல்பட்டார்கள்.

இந்தப்புரிதலும், மன உறுதியும் இருந்ததால்தான் காந்தியால் மதுவிலக்கிற்காக பல்வேறு வடிவிலான போராட்டங்களை வடிவமைக்க முடிந்தது. இராஜாஜியால் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது; விற்பனை வரி என்னும் பொருளாதார இழப்பை சரிகட்டும் முறையை அறிமுகப்படுத்த முடிந்தது. பெரியார் தனது துணைவியார், சகோதரியோடு மதுவுக்கு எதிரான போர்க்களத்தில் இறங்கினார். காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு மற்ற மாநிலங்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய தான் தயார் என்றார் அண்ணா. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த முயற்சி தோல்வி கண்டும் தொடர்ந்து முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.

இன்றுள்ள சூழலில் வெறும் சட்டத்தால் மட்டும் மதுவிலக்கு சாத்தியமாகாது. காந்தி காலத்தில், மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளியிடப்பட்டது. "விமோசனம்" என்ற பத்திரிக்கையின் முதல் இதழை முழுக்க, முழுக்க இராஜாஜியே தயாரித்தார். அன்றுள்ள தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தார்கள். இன்று நமக்கு, டி.வி, ரேடியோ, எஃப்.எம், என்று எத்தனையோ மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ள சூழலில் மக்களிடம் மதுவிலக்குப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இருக்காது.

"நிதிப்பற்றாக்குறை இருப்பதைக் காரணம் காட்டி, மதுவிலக்குக் கொள்கையை நான் தளர்த்தி விட்டேன் என்றால் சாமன்ய மக்கள் குடிகாரர்களாக மாறி தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும். எனவே அரசுக்கு நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன் என்று கூறியதுடன் 'எனக்குப் பின்னால் வரும் இளைய சமுதாயத்தினரும் குடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள்" என்றார் அண்ணா.

அண்ணாவின் வழிநடக்கும் தி.மு.கவும், அ.தி.மு.கவும் மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றும் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம். பா.ம.கவின் நல்லதொரு வேண்டுகோளை ஆளுங்கட்சி மனதார ஏற்றுக்கொண்டால்கூட மதுவிலக்கு சாத்தியம்.

ஆக, மதுவிலக்கு வேண்டுமென்று அரசு மனது வைத்தால் இது சாத்தியம். அரசியல் தலைவர்களுக்குத் தெளிவும், துணிவும் இருந்தால் இது சாத்தியம். ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் "மனமிருந்தால் மார்க்கமுண்டு".

April-07

Wednesday, December 20, 2006

கிராமங்களும்....நகரங்களும்

நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஒரு வருடமாகிறது. பல்வேறு சமூகப் பணிகளுக்காக தமிழகத்தின் பல கிராமங்களுக்கும், சிற்றூர்களுக்கும் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது எத்தனையோ ஒப்பீடுகள் மனத்திரையில் ஓடுகின்றன.

முக்கிய சாலைகள் தினந்தோறும் கூட்டப்பட்டு கல், மண் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தண்ணீர் ஊற்றிக் கழுவியும் விடுவார்களோ என்னவோ ( நான் பார்த்ததில்லை !! ) ...இப்போது புதிதாகப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய சாலையின் இரு மருங்கிலும் மரங்கள், செடிகள், ஓவியங்கள், கலைநயம்மிக்க இரும்பு வார்ப்புகள் என இழைத்து, இழைத்து சாலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இது சென்னை நகரில்.

ஆயிரக்கணக்கான கிராமங்களில் கல்,மண்,குழி,மேடு இவைகள்தான் இன்னமும் சாலைகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

போன உயிரை திருப்பித்தருதல் என்ற ஒரே சிகிச்சையைத் தவிர அனைத்து சிகிச்சைகளையும் தர தனித்தனி மருத்துவர்கள், மருத்துவமனைகள், சென்னை நகரில்.கிராமங்களில் அனாதைக் குழந்தை போல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பிடிக்கும் கனவுத்திட்டத்தை ஆரம்பப் பள்ளியிலிருந்து ஊற்றி வளர்க்கும் பெற்றோர்கள், ஒரு புறம்.உண்ணல், உறங்கல், உழைத்தல் இவற்றிற்கே நேரம் போதாத வறுமை நிலையில் பெற்றோர்கள், மறுபுறம்.

பொறியியற் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை கிடைக்கிறது. பத்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை சம்பளத்தோடு, 22 வயதிலேயே.
மாத வருமானம் 2000த்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள், விவசாயிகள் பல இலட்சம்.

கிராமத்து மக்கள் என்று மட்டுமில்லை, நகரங்களில் உள்ள சேரிகள், கீழ் நடுத்தரக் குடும்பங்கள் அனைவருக்கும் இதே நிலைதான்.

ஏன், இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ?

இரண்டு புறம் இருப்பவர்களும் மனிதர்கள்தானே ?

இரண்டு பேரும் வசிப்பது தமிழகத்தில்தானே ?


ஏழைகளுக்கும்-பணக்காரர்களுக்கும், கிராமங்களுக்கும்-நகரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கும்போது ஒரு விகார உருவம் கண் முன் தோன்றுகிறது. தரை வரை நீண்ட கைகள், ஒரு கால் தரையில் படாமல் தொங்கிக் கொண்டுள்ளது, பானை போல் பெருத்த வயிறு, காதுகள் இல்லை, மூக்கில் ஒரு துவாரம்தான் உள்ளது. நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாய் உள்ளதல்லவா ? ஆம், அப்படித்தான் உள்ளது நமது சமூகம்.

இலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் பரம ஏழைகள் ஆகிக் கொண்டுள்ளார்கள்.

ஏன் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை ?

தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லையா ? விவசாய மேதைகள் இல்லையா ? விஞ்ஞானிகள் இல்லையா ? நல்ல ஆசிரியர்கள் இல்லையா ? எல்லா வல்லுனர்களும் இருக்கிறார்கள். உபயோகித்துக் கொள்வதற்குத்தான் யாருமில்லை. "கடை விரித்தேன். கொள்வாரில்லை" என்று சொல்லுவார்கள். அதுபோல அறிவு வெள்ளம் கரை புரண்டோடுகிறது இங்கே. அணை கட்டிப் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆளில்லை.ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வளர்ச்சியில் அக்கறை போதவில்லை; அணுகுமுறை சரியில்லை என்பதுதான்.

ஒரு சமயம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு அரசு அலுவலகத்தைப் பார்வையிட வந்திருந்தார். அங்கு அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்ன கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்டார். கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். கொஞ்சம் யோசித்துவிட்டு " நீங்கள் ஏன் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள பொது இடத்தில் அமர்ந்து இதனைப் பற்றிப் பேசக்கூடாது? அரசு அதிகாரிகளாகிய நீங்கள் கிராமங்களுக்குச் சென்றால், உங்களைப் பார்ப்பதற்கு நிறைய கிராம மக்கள் வருவார்கள். அவர்களையும் வைத்துக் கொண்டு பேசுங்களேன்; கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசனை சொல்வதற்கு அவர்களை விடச் சிறந்த ஆலோசகர்கள் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள்." என்றார் காமராஜர். என்ன எதார்த்தம் பாருங்கள். இதுவல்லவா ஆட்சி முறை. இதுவல்லவா ஜனநாயகம். கிராம மக்களிடமிருந்து கூட ஆலோசனைகள் பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர், வல்லுனர்களை வணங்கியல்லவா வரவேற்றிருப்பார். மக்களைப் படிக்கும் இந்த மனோபாவத்தால்தான் அந்த படிக்காத மேதையின் 9 வருட ஆட்சியை "தமிழகத்தின் பொற்கால ஆட்சி" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இன்றும் எல்லா அமைச்சர்களும் கிராமத்திற்குச் செல்கிறார்கள்; விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக !!

புதியதாக ஆரம்பிக்கப்படும் பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் நகரங்களுக்கு அருகிலேயே, குறிப்பாக சென்னை நகருக்கு அருகிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அதனால்தான் நகரங்கள் வளர்கின்றன என்ற ஒரு வாதம் நம்முன் வைக்கப்படுகிறது.

ஏன் நகருக்கு அருகில் ஆரம்பிக்க விரும்புகிறார்கள்?

நகரத்திற்கு அருகில் இருப்பதால், மின்சாரம், தண்ணீர், சாலைகள், கழிவுநீரகற்றும் வசதி, தொலைபேசி, இன்டர்நெட் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்கின்றது. எல்லா அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமும் சென்னையில்தான் இருக்கின்றது. இது போன்ற தொழிலுக்கு சாதகமான காரணிகள் அதிகம் இருப்பதால், நகருக்கு அருகில் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். இவர்களை நாம் வலுக்கட்டாயமாக கிராமத்தில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைத்தால் " அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள், வருகிறோம் என்பார்கள்". அதற்கு நம் ஆட்சியாளர்களிடம் பதில் கிடையாது. பிறகெப்படி தொழில் நிறுவனங்களை கிராமத்திற்கு அழைத்து வரமுடியும் ?

சில அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது 'போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது' என்பார்கள். கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுப்பதை ஒரு 'போர்க்கால நடவடிக்கையாக' அரசு எடுத்துச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து நகரங்கள் வளர்ந்து கொண்டும், கிராமங்கள் பின்தங்கியும் உள்ள சூழலே தொடரும்.

அரசு செய்ய வேண்டும் எனும்போது, மத்திய அரசா, மாநில அரசா அல்லது உள்ளாட்சி அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது?

கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பராமரித்தல் போன்ற பொறுப்புக்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தாலும் நிதியாதரம் இல்லாததால் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் கையேந்தி நிற்கிறது தமிழ்நாட்டின் 12618 கிராம பஞ்சாயத்துக்கள்.

தன் தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு( M.P) தொகுதி வளர்ச்சி நிதி என்றொரு நிதி அளிக்கப்படுகிறது. இது 1993-94 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்டிற்கு ரூ.5 இலட்சமாக இருந்தது. 1994-95லிலேயே இது ரூ.1 கோடியாகியது. 1998-99 இல் இது ரூ.2 கோடியாகியது. இதனை மத்திய அரசு தருகிறது.

இதேபோல் எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டிற்கு ரூ.1 கோடி தரப்படுகிறது. இதனை மாநில அரசு தருகிறது. ( தொகுதி வளர்ச்சி நிதி என்ற முறையே தேவையா...இல்லையா என்பது பற்றிய பல்வேறு விவாதங்கள், கோர்ட் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது ேவ்று விஷயம். அதைப்பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாய்ப் பார்ப்போம்.)

சட்டமியற்றும் பணிதான் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் தலையாய பணி. ஆனால் இவர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி என்ற ஒரு நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிறது அரசு. தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் மொத்த வரி வருவாயிலிருந்து ஒதுக்கப்படும் நிதியானது 1997ல் இருந்து 8 சதவிகிதமாகவே இருந்து வருகிறது. அதாவது மாநில அரசுக்கு பல்வேறு வரி வசூல் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் 8 ரூபாயை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும்.மாநில அரசின் வரி வருவாய் பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளைப் பெற வல்லுனர்களைக் கொண்ட "மாநில நிதி ஆணையத்தை" அமைக்கிறது அரசு. இந்த நிதிஆணையம் அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளிக்கிறது.

முதலாவது நிதிஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியிருந்தாலே இந்த ஒதுக்கீடு 2001 ம் ஆண்டே 12 சதவிகிதமாகியிருக்கும். ஆம், 1995ம் ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நிதி ஆணையமானது 1997-98 ம் ஆண்டில் 8 சதவிகிதம் ஒதுக்குங்கள்; பிறகு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதத்தை அதிகரித்து 2001-02 இல் இதனை 12 சதவிகிதம் ஆக்குங்கள் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மூன்றாவது நிதி ஆணையம் கூட அமைக்கப்பட்டுவிட்டது. இன்னமும் 8 சதவிகித நிதிதான் உள்ளாட்சியமைப்புகளுக்குத் தரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்தான். மேற்கு வங்காளம் தன் வரிவசூலில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குகிறது.

8 சதவிகிதத்தை இரண்டு மடங்காக்கிவிட்டால் கிராமங்கள் வளர்ந்து விடுமா ? அது மட்டுமே போதாது. அடிப்படை வசதிகள் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமே. நாம் கேட்பது, முதலில் அடித்தளத்தை அமையுங்கள். அதையே செய்யாமல், " வறுமையை ஒழிப்போம்" என்று வரட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

Thursday, November 23, 2006

இளைஞர்களும் அரசியலும்...

சமீப காலங்களில் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் தான் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர் கூட்டங்களில் எதிர்காலத்தில் அவர்கள் எந்தத் துறையில் ஈடுபட விரும்புகின்றனர் என்ற கேள்வியைத் தவறாது கேட்டு வருகின்றார். கணிப்பொறி, பொறியியல் வல்லுனர், விஞ்ஞானி, தொழிலதிபர், ஆசிரியர், மாவட்ட ஆட்சியர் போன்ற துறைகளில் ஈடுபட விரும்புவதாக பல மாணவ,மாணவியர் தெரிவிக்கின்றனர்.

“உங்களில் யார் அரசியலில் ஈடுபட்டு நல்லதொரு அரசியல் தலைவராக வர விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கும்போது, வெகுசிலரே நாங்கள் அரசியல்வாதிகளாக விரும்புகின்றனர் என்று பெருமையோடு சொல்கிறார்கள். இந்த செய்தியைப் படிக்கும்போது நம்முள் ஒரு கேள்வி எழுகிறது.

”பெரும்பாலான இளைஞர்கள் அரசியலை ஏன் புறக்கணிக்கிறார்கள்?

” முடிவு செய்யப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தும் பொறுப்பாகிய மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை தங்களின் இலட்சியக் கனவாகக் காண்கின்ற இளைஞர்கள் மிகப் பலர். ஆனால் அந்தக் கொள்கைகளையே முடிவு செய்யும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதியாக விரும்புவோர் மிகச் சிலர்.ஏன் ?

ஏன் இந்த நிலை? ஆராய்வோம்.

முதலில், அரசியலை இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்களை ஆராய்வோம்.

1. அரசியல் = ஏமாற்றுதல் :

சாதாரணமாக நாம் அலுவலகங்களிலும், வியாபாரத்திலும், விளையாட்டுகளின் போதும் யாரேனும் ஏமாற்றினாலோ, குழப்பத்தை விளைவித்தாலோ, முதுகில் குத்தினாலோ உடனே நம் வாயில் வரும் வார்த்தை “இவன் அரசியல் பண்ணறான்டா..” . இது வாயிலிருந்து மட்டும் வரும் வார்த்தையல்ல. பல ஆண்டு கால அனுபவத்தின் வெளிப்பாடு.

ஆக, அதிகாரத்தை அடைவதற்காக, அதிகாரத்தின் மூலம் சொத்துக்களையும் அந்தஸ்தையும் பெருக்கிக் கொள்ள, ஏமாற்றுதல், பச்சோந்தித்தனமாக சூழ்நிலைக்குத் தக்கவாறு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுதல் போன்ற குறுக்கு வழிப் பயணங்கள்தான் அரசியல் என்று கடந்த தலைமுறை அரசியல்வாதிகள் பலர் அடையாளப்படுத்திவிட்டார்கள். எனவே, நியாயமான வழியில் செல்ல விரும்புவோர் நாம் இதில் சாதிக்க முடியாது என்று விலகிவிடுகின்றனர்.

2. சொந்த வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமே ?

மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியோ அல்லது அதுபோன்ற அரசின் எந்தப் பதவிக்கும் குறிப்பிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றால் வேலை நிச் சயம். பணி ஓய்வு பெறும்வரைக்கும் அடிப்படைத் தேவைகளை, வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால் அரசியலில் அப்படியில்லை.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவது பல்வேறு சலுகைகள் பணிக்காலத்திலும், பதவி விலகிய பின்னரும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் உள்ளாட்சி அமைப்பிலுள்ள பதவிகளுக்கு இந்தச் சலுகைகளும் கிடைப்பதில்லை. நடைமுறையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை தனது சொந்த பொருளாதாரத் தேவைகளுக்கு என்ன செய்வது என்பதற்கு தெளிவான வழிமுறை இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை.

இப்படிப்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும் போது நியாயமான வழியில் செல்ல விரும்புவோர் ஒதுங்கி நிற்பது நியாயமாகத்தான் படுகிறது. எப்படியும் வாழலாம் என்று இருப்பவர்கள் சம்பாதித்துக் கொள்ள அரசியலில் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என்று இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை.

3. பெற்றோர், சமூக ஆதரவின்மை:

இளைஞர்களின் வாழ்க்கை இலட்சியத்தை நிர்ணயிப்பதில் பெற்றோர்களும், சமூகமும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சில சமயங்களில் பெற்றோர்கள் தாங்கள் என்ன படிக்காமல், சாதிக்க முடியாமல் போய்விட்டதோ அதனைத் தங்கள் மகன்/மகள் செய்யவேண்டுமென்று அவர்கள் மீது சில ஆசைகளைத் திணிக்கின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலையில் ஏதேனுமொரு இளைஞன் தன் அப்பா, அம்மாவிடம் சென்று " அப்பா, நான் நல்லதொரு அரசியல்வாதியாக வர விரும்புகிறேன். இதுதான் என் இலட்சியம்" என்று சொன்னால் . . . உடனே அப்பாவிடமிருந்து வரும் பதில் ". . . உருப்படறதுக்கு ஏதேனும் வழியப் பாரு. . அரசியலாம், அரசியல்.. உங்கொப்பன் என்ன கோடி கோடியா சொத்து சேத்தா வச்சிருக்கான் ? இல்லை நீதான் பெரிய அரசியல் தலைவரோட வாரிசா ? இதெல்லாம் நம்மளப் போல சாதாரணமானவங்களுக்கு ஒத்துவராது . . . போய் ஏதேனும் கம்பெனியில வேலை வாங்கி நாலு காசு சம்பாதிக்கற வழியப் பாரு "”.

பற்றாக்குறைக்கு பக்கத்து வீட்டு, எதிர்த்த வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க எல்லாம் வந்து பஞ்சாயத்து பண்ணி அந்த இளைஞனின் அரசியல் கனவை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்.

4. போதிய நடைமுறை அறிவு தரப்படாமை:

கல்லூரிப் படிப்பை முடித்துவரும் மாணவ,மாணவிகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், பள்ளி, கல்லூரியில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். மொழிப்பாடங்களையும், கலை, அறிவியல் பாடங்களையும் ஓரளவிற்குக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், மீதியுள்ள வாழ்நாள் முழுவதும்தான் வாழப்போகும்( அடுத்த ஒரு 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோமே) இந்த சமூகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது; ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்கு திட்டமிடவும், திட்டங்களை செயல்படுத்தவும் அதிகாரமும், நிதி ஆதாரமும் படைத்த அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது, அதில் அரசியல்வாதிகளின் பணி என்ன? தனது பங்களிப்பு என்ன? என்பது பற்றிய தெளிவு இல்லாதவனாகத்தான் வெளிவருகிறான் இன்றைய சராசரி இளைஞன். இது இளைஞனின் குற்றமல்ல. பாடத் திட்டத்தின், பாடம் எப்படி சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதில் உள்ள குற்றம்.

ஆக, இந்த சமூகம் எப்படி இயங்குகிறது; அதில் அரசியலின் பங்கென்ன என்ற தெளிவில்லாத சராசரி இளைஞன் எப்படி அரசியலில் ஆர்வத்தோடு பங்கு பெற முன் வருவான் ?

அரசியலை இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்களை கண்டோம்.காரணங்களைக் களைவது எப்படி ? என்று இளைஞர்கள் அரசியலை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்?

1. பெற்றோர்கள்,சமூக ஆதரவு:

"அரசியல் ஒரு சாக்கடை". தன் மகன் அல்லது மகள் அந்தச் சாக்கடையை சுத்தம் செய்வதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று எண்ணியுள்ள பெற்றோர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் " நாடு இப்படிப் போகிறதே? இதை யார் சரிப்படுத்தப் போகிறார்கள்" என்று அக்கறைப் பட்டிருப்போம்? நல்ல தலைவர்கள் என்ன வானத்திலிருந்தா வரப்போகிறார்கள்? நம்மைப் போன்ற பெற்றோர்கள்தானே நம் குழந்தைகளை முன்னுதாரணத் தலைவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்? " சாக்கடை சீராக சென்று கொண்டிருந்தால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அடைத்துக் கொண்டு நாற்றம் எடுக்கும்போது யாராவது சுத்தம் செய்துதானே ஆக வேண்டும். அது பிறர் வீட்டுக்குச் செய்யும் சேவை என்றெண்ணாமல், தன் வீட்டின் சுகாதாரமும் அதில் அடங்கியுள்ளதே என்று கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓரளவு வசதியும், வாய்ப்பும் பெற்ற பெற்றோர்கள் நினைத்தால் தங்கள் மகனை, மகளை நல்லதொரு தலைவனாக வளர்த்தெடுக்க முடியும். அவர்கள் மேல் எந்த எண்ணத்தையும் திணிக்காமல், அவர்களுக்கே ஆர்வம் வரும்படியான வழிமுறைகளில் அவர்களைத் தூண்டி நாடு போற்றும் தலைவனாக வளர்த்தெடுக்க முடியும். அப்படி வளர்தெடுக்க விரும்பாவிட்டாலும், குறைந்த பட்சம் சுய ஆர்வத்தோடும், அறிவார்ந்த அணுகுமுறையோடும் அரசியலில் பங்கு பெற விரும்பும் தங்கள் மகன், மகளுக்கு முழு சுதந்திரமாவது கொடுக்க வேண்டும்.2. கல்லூரிகளில் - சமூக அறிவியல் பாடம்: தேர்தல்,அரசியல் கட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களின் பணிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் பணிகள் போன்ற “சமூக அறிவியல்-குடிமையியல்” பாடங்கள் பத்தாம் வகுப்பு வரைதான் கற்றுத்தரப்படுகின்றன. கல்லூரிகளில் இந்தப் பாடங்கள் இல்லை. ஆராய்ந்து அறியும் வயதாகிய கல்லூரிப் பருவத்தில் இப் பாடங்களைக் கொடுப்பது, இளைஞர்களின் அரசியல் அறிவை வளர்ப்பதாக இருக்கும். பொறுப்புள்ள குடிமகனாய் செயல்படுவதற்கும், ஆர்வமிருப்பவர்கள் பொறுப்புள்ள தலைவர்களாக வருவதற்கும் இது நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். கல்லூரிகளில் மொழிப்பாடங்களை கட்டாயமாக வைத்திருப்பது போல், இந்தப் பாடங்களையும் ஏன் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாது? கட்டாயப் பாடமாக வைப்பதன் நோக்கம் அதனைக் கற்றுத்தரும் முறையில்தான் பூர்த்தியாகும். ஆம், வழக்கம்போல் கேள்வி, பதில், மனப்பாடம் என்ற அடிப்படையில் இந்தப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை. சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடைமுறை உதாரணங்களோடு இந்தப் பாடங்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.

3. அரசியல் தலைவர்களை வளர்த்தெடுக்க ஒரு நிறுவனம்:

பொதுவிவகாரங்களில் ஆர்வமும், ஆழ்ந்த அறிவுமுடைய; எதிர்காலத்தில் அரசியல் தலைவனாக வர விரும்பும் ஒரு இளைஞன் தன் அறிவையும், திறமையையும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் ஏதுமில்லை.( புனேவில் இது போன்றதொரு நிறுவனம் இருப்பதாகக் பத்திரிக்கையில் பார்த்திருக்கின்றேன். ஆனால் அங்கு சென்று பணம் கட்டிப் படிப்பதற்கு நடுத்தர மக்களின் பொருளாதாரம் ஒத்துழைக்காது.) அப்படியொரு பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளிக்கலாம்.

மிகக்குறைந்த கட்டணத்தில், தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகவும் இந்த நிறுவனத்தில் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படலாம். இந்த வகுப்புகளின் மூலம் மக்களின் சமூக,பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றியும், தற்கால அரசியல் நடைமுறைகளைப் பற்றியும், அரசியல் மூலம் எவ்வாறு சமூக,பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது பற்றியும் அங்கு பயிலும் மாணவர்களிடம் தெளிவை ஏற்படுத்தலாம். தேவைப்படும், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கலாம்.

படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்கள் சிலர், விளையாட்டில் விற்பன்னர்களாக இருப்பார்கள். அவர்களை விளையாட்டைக் கற்றுத் தரும் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் திறமையை ஊக்குவிப்பது போல், பொதுவிவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து எதிர்காலத்திற்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ளலாம். இன்றைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு மனம் நொந்து, நல்லவர்கள், அறிவார்ந்த அணுகுமுறையுடையவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களா என்று ஏங்கும், வசதி படைத்தோர் இந்த பயிற்சி நிறுவனத்திற்கு உதவி செய்ய முன்வரலாம்.

இப்படி, பெற்றோர்களாலும், சமூகத்தாலும், பள்ளி, கல்லூரிகளாலும், பயிற்சி நிறுவனங்களாலும் வளர்த்தெடுக்கப்படும் ஒரு முக்கிய விஷயமாக “அரசியல்” மாறும்போது அறிவார்ந்த அணுகுமுறையுள்ள ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். இவர்கள், புதிய அரசியல் கொள்கைகள், கலாச்சாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பல்லாயிரம் இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவார்கள்; நாமெல்லாம் கனவில் தேடிக்கொண்டிருக்கும் நல்லாட்சியைத் தருவார்கள்.

பின்குறிப்பு:வருடம் 2015:செய்தி: கோவையில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பேராசிரியர் அப்துல்கலாம் மாணவர்களை நோக்கி “உங்களில் யார் அரசியலில் ஈடுபட்டு நல்லதொரு தலைவராக வர விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபோது, பெண்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கைதூக்கி ஆச்சயர்யப்படுத்தி, அசத்தினர்.