Senthil Arumugam's blog

Tuesday, September 26, 2006

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.... புத்தக விமரிசனம்

நூலாசிரியர் : சாவித்திரி கண்ணன்

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம். துக்ளக் பத்திரிக்கையில் 1997 முதல் 2004 வரை சாவித்திரி கண்ணன் அவர்கள் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. மொத்தம் 67 கட்டுரைகள். மூன்றில் 2 பங்கு கட்டுரைகளை கல்வி, நீராதாரத் திட்டங்கள், அரசு அலுவலகங்களின் இலஞ்ச ஊழல்கள் என்ற மூன்று பிரிவுக்குள் அடக்கலாம். மீதியுள்ளவை மனித உரிமை மீறல்கள், விவசாயம், அரசியல் போன்ற சமூகப் பிரச்சனைகளை ஆராயும் கட்டுரைகளே.

காவிரி,கிருஷ்ணா,வீராணம் போன்ற பெரிய நீராதாரத் திட்டங்கள் பற்றிய கட்டுரைகளை வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரைகள் என்பதை விட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது விவசாயக் கல்லூரிகள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள் என்று அழைப்பதே பொருத்தம். அவ்வளவு அடர்த்தியான தகவல்கள், கள ஆராய்ச்சி, கடந்த கால வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அதனால் படிப்பதற்கும் கொஞ்சம் கடினமாய் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்குமில்லை. ரஷ்ய நிறுவனம் இலஞ்சம் தர மறுத்ததால் கைவிடப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டத்தால் பயனுமில்லை, சாத்தியமுமில்லை என்பதை விளக்கும் விரிவான கட்டுரைகளும் உள்ளன.

மாநகராட்சி பள்ளிக் கல்வி, நர்சரி பள்ளிக் கல்வி, கம்ப்யூட்டர் கல்வி, சட்டக் கல்வி, பொறியியற் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகம் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் இலஞ்ச-ஊழல்கள், பொறுப்பற்ற செயல்பாடுகள் போன்றவற்றை கிட்டத்தட்ட 15 கட்டுரைகள் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

இந்திய அரசியல் சாசனத்தின் 45வது பிரிவு, இந்த சாசனம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளில் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அளிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. அரசியல்சாசனம் நடைமுறைக்கு வந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 14 வயதிற்குட்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல்தான் உள்ளன. இவர்களில் பலர் குழந்தைத் தொழிலாளர்களாகவுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் சிலரின் பேச்சைப் படம் பிடித்துள்ள கட்டுரை "கொத்தடிமைத் தளையில் குழந்தைகள்"." காலைல 7 மணிக்கெல்லாம் தறி வேலை செய்யற எடத்துல இருக்கணும். சாயந்தரம் 7 மணி வரை செய்றேன். எனக்கு ஸ்கூலுக்குப் போக முடியலைனு வருத்தமா இருக்குதுனு" 9 வயது ஜெயலட்சுமி செல்றது நமது நெஞ்சை நெகிழ வைக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையிலும் அந்நியன் படத்தில் மாறுவது போல் நூலாசிரியர், வழக்கறிஞராக மாறி தான் எடுத்துக் கொண்ட கருத்தை ஒரு வழக்காகக் கருதி அதன் வாதி,பிரதிவாதிகள்,துறை வல்லுனர்கள்,பொதுமக்கள் போன்ற அனைவருடனும் கலந்துரையாடி, சில சமயங்களில் புலனாய்வு செய்து அதன் சாராம்சத்தை நடுநிலையோடு கட்டுரையாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, பழவேற்காடு ஏரியில், வடசென்னை அனல்மின் நிலைய ரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கட்டுரையில்(" மீள முடியாத நிலையில் மீனவர் வாழ்க்கை") பழவேற்காடு மீனவ சங்கத் தலைவர், அகில இந்திய மீனவ சங்கத் தலைவர், உள்ளூர் இளைஞர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி நிலையத் துறை வல்லுனர்கள்,மீன்வளத்துறை அமைச்சர் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் கோர்த்து நல்ல கட்டுரையாக்கியுள்ளார்.

"அரிசியில் அடிக்கப்படும் கொள்ளை" கட்டுரையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், பொதுவிநியோகக் கடைகளுக்கு அரிசியாக வரும்வரை நடக்கும் ஊழல்களைப் பற்றிப் படிக்கும் போது இதை வைத்து "ஒரு நெல்லின் பயணம்" என்ற புலனாய்வுப் படமே எடுக்கலாம் போல. அவ்வளவு ஊழல்கள்.

"ஏழையின் பட்ஜெட்" ஒரு வித்தியாசமான பட்ஜெட். ஒரு ரிக்ஷாக்காரரின் மாத வரவு செலவு பற்றியது. "பலியான மாணவன் பணத்திற்காகச் செய்யப்பட்ட ஆபரேஷன்", ரமணா படத்தை நினைவூட்டுகிறது.

இந்தியாவில் அரசு அலுவலகங்களில் இலஞ்ச-ஊழல், பொறுப்பின்மைக்கா பஞ்சம். ஒவ்வொரு அரசு அலுவலமாக ஏறி அங்கு என்னதான் நடக்கிறது. எப்படித்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்று அறிந்து, உலகறியச் செய்ய துறைமுகம், கஸ்டம்ஸ், கால்நடைத்துறை, மாநகராட்சி அலுவலகம், தலைமைச் செயலகம் என்று பல இடங்கள் சுற்றி 'மக்களே....எப்படி இலஞ்சம் வாங்குகிறார்கள்" பாருங்கள் என்று "கரை புரண்டோடும் துறைமுக ஊழல்", "தற்குறி நிலைமையில் தலைமைச் செயலகம்", " கால்நடைத் துறையில் கூட்டுக் கொள்ளை", "மலைக்க வைக்கும் மாநகராட்சி ஊழல்" போன்ற கட்டுரைகள் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். அரசியல் தலையீட்டால், கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகள் நஷ்டமடைந்ததையும், கூட்டுறவுத் துறை வீட்டு வசதி திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததையும் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

அரசு நிறுவனங்களில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அரசு சாரா நிறுவனங்களில் நடக்கும் ஊழலைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.

என்னென்ன காரணங்கள் காட்டி இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது போல், எப்படியெல்லாம் செயல்பட்டால் இந்த இலஞ்ச, ஊழலை ஒழிக்கலாம் என்று தனியே ஒரு புத்தகம் வெளியிட ஆசிரியரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நாட்டில் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவோருக்கு, படம் பிடித்துக் காட்டுவோருக்குப் பஞ்சமில்லை. ஆனால் தீர்வு சொல்வார்தான் யாருமில்லை. நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரச்சனையிலும் ஆழமான பார்வை கொண்ட நூலாசிரியருக்கு தீர்வு சொல்லும் தகுதி, திறமை உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....

23-september-2006

0 Comments:

Post a Comment

<< Home