Senthil Arumugam's blog

Tuesday, August 22, 2006

முதலமைச்சர் முருகன்

செந்தில் ஆறுமுகம்

ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறார் முருகன். வயது 40. தினமும் 12 மணி நேர வேலை. வாரத்தில் 7 நாளும் வேலை. மாதச்சம்பளம் ரூ.2000 !!! அப்பா இறந்துவிட்டார். நோயாளியான அம்மாவைக் கவனித்துக் கொள்ளவேண்டிய காரணத்தாலும், குடும்ப வறுமையின் காரணத்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்ப சூழலின் சோகங்கள் தன்னைச் சிறைபிடித்தாலும் நாட்டு நடப்பை கவனிப்பது, பலவகைப் புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஆர்வமுடையவர் முருகன். சமீபத்தில் எனக்கு அறிமுகமானார் இந்த நண்பர்.

முருகன் போன்ற சாதாரணத் தொழிலாளிகள் மனத்தில் நாட்டு நடப்பைப் பற்றிய பார்வை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் " நீங்கள் தமிழக முதல்வரானால் எந்த 3 திட்டங்களை முதலில் நிறைவேற்றுவீர்கள் ?" என்று கேட்டேன்.

சிறிது யோசனைக்குப் பிறகு சொன்னார். முதல் திட்டம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல். இரண்டாவது, இலஞ்ச ஊழலை ஒழித்தல். மூன்றாவது, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வரல்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் பற்றி விரிவாய் விளக்குங்களேன் என்று கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாய்க் கொட்டினார் முருகன்.

தான் தினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களையும் அதன் விலையையும் பட்டியலிட்டுக் காட்டி விலைவாசி எவ்வளவு உயர்ந்துவிட்டது பாருங்கள் என்றார். நான் முதல்வரானால் அடித்தட்டு மக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு பைசா கூட அதிகரிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றுவேன் என்றார். தன் வருமானத்தின் பெரும்பகுதி அத்தியாவசியச் செலவுகளுக்கே சென்று விடுகிறது என்ற ஆதங்கத்தில் பேசினார் முருகன்.

தொடர்ந்து நடந்த உரையாடல்....

விலைவாசி உயரக்கூடாது என்று விரும்புகிற நீங்கள், உங்கள் நிறுவனத்தில் பலவருடங்களாகியும் சம்பள உயர்வு தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ?

எனக்கு சம்பளம் அதிகம் வேண்டுமானால் நல்ல சம்பளம் கொடுக்கும் வேறு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது நானே ஒரு சுயதொழில் தொடங்கவேண்டும்.

உங்களுக்குத்தான் ஆர்வமும் அறிவும் இருக்கிறதே பிறகென்ன ஒரு சுயதொழில் தொடங்கவேண்டியதுதானே?

என்னிடம் கையில் காசில்லை... வங்கியில்தான் தொழிற்கடன் வாங்க வேண்டும்.நல்லது.. ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது ?

வங்கியில் எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் எங்கு லோன் கொடுக்கிறார்கள்? ஏதாவது சிபாரிசு அல்லது சொத்து இருந்தால்தான் லோன் கிடைக்கும்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சரியான திட்டத்தோடு, தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு லோன் கிடைக்க வாய்ப்புள்ளதே?

ஊரில் நிறையப் பேர் இப்படித்தான் சொல்றாங்க... ஆனால் வங்கிக்கு எங்களைப் போன்ற சாதாரண மக்கள் போனா முகம் கொடுத்தே பேசறதில்ல... பிறகெங்கு லோன் கேட்கறது ?

இப்படிச் சென்றது உரையாடல்.....சரி.. இப்ப இந்தப் பிரச்சனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். முருகன் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவேன் என்று சொன்ன முதல் திட்டத்தை திரும்பவும் ஆராய்வோம்.

அவர் சொன்ன திட்டம் 'அரசானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பது.' ஒரு அரசானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் முதல் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களில், செயல்பாடுகளில் முதல் கவனம் செலுத்த வேண்டுமா? அடித்தட்டு மக்கள் உயிர்வாழத் தேவையான உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பது என்பதை அரசின் ஒரு அடிப்படைக் கடமையாகக் கருதலாமே தவிர அதை ஒரு தொலைநோக்குத் திட்டமாகக் கருதமுடியாது. ஒரு பொருளை உற்பத்தி விலையைவிடக் குறைவாக விற்றால் நஷ்டம் ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அது பொருளாக இருந்தாலும், அரசாங்கத்தின் சேவையாக இருந்தாலும் விலையேற்றம் நடந்தால் உடனே கொதித்து எழுகிறோம். விலை குறைப்பு பண்ணச் சொல்லி ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு நடத்துகிறோம். அதே சமயம் நமக்கு சம்பள உயர்வு, சலுகைகளில் தாரளம் வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். வருமானம் அதிகம் வேண்டும். ஆனால் பொருட்கள் மற்றும் அரசின் சேவைகள் குறைந்த விலைக்கு வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும் ? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

பொதுவாகவே ஒரு பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்க முற்படும்போது பிரச்சனையின் மூலம்(Root) என்று ஆய்ந்து அதனைத் தீர்க்க முற்பட வேண்டும். முருகன் உண்மையிலேயே விரும்புவது, 'விலைவாசிக் கட்டுப்பாடு அல்ல'. அவர் உண்மையில் விரும்புவது மகிழ்ச்சியான, இயல்பான வாழ்க்கை. நியாயமான ஆசை. ஆனால் இதற்கு அவருடைய வருமானம் போதவில்லை. வருமானத்தை அதிகரிக்க வழி தெரியவில்லை. உதவுவார், வழி காட்டுவோர் யாருமில்லை. இந்த குழப்பத்தில் 'விலைவாசி ஏற்றம்தான்' தன் குடும்ப மகிழ்ச்சியை சீர்குலைக்கிறது என்று முடிவெடுக்கிறார் முருகன். ஆழமாய் யோசித்துப் பார்த்தால் 'அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு' மட்டும் முருகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையத் தந்துவிடாது? மருத்துவம்,கல்வி,வீடு, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், குடும்பத்தின் பொழுதுபோக்கு, பெற்றோர்களை கவனித்தல் போன்ற எத்தனையோ குடும்பத் தேவைகளை முருகன் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் 'அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு' தீர்வாகிவிடுமா? வேரை பிடுங்காமல் எத்தனை முறை கிளையை, இலையை வெட்டினாலும் பயனில்லை.

சரி... முருகன் போன்றோர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன?முருகன் மற்றும் நாட்டிலுள்ள எல்லோரும் தன்னுடைய முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான தகுதிகளை வளர்த்தெடுத்து, முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும். தகுதிகளை வளர்த்தெடுப்பது என்பது கல்வி சார்ந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்பது விவசாயம் இலாபகரமான தொழிலாக மாறுவதற்கான கொள்கை முடிவுகள், சிறுதொழில் செய்ய, தொழிற்சாலைகள் தொடங்க முன்வருவோரை ஊக்குவித்தல், எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலை மக்களிடம் சென்று சேர்த்தல் போன்றவை அடங்கும்.

கல்வி சார்ந்து யோசிக்கும்போது தமிழ்நாட்டில்தான் 248 பொறியியற் கல்லூரிகள், 215 மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்(மருத்துவ, துணை மருத்துவ கல்லூரிகள் உட்பட), 236 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 670 பிற கல்லூரிகள்(கலை அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல) உள்ளனவே என்று யோசிக்கத் தோன்றும்? உயர்கல்வியின் உண்மை நிலை அறிய தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டசபைத் தொடரில் உயர்கல்வி அமைச்சர் முனைவர்.பொன்முடி, தனது துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பு அறிக்கையின் முதல் பக்கத்திலுள்ள தகவல் நமக்கு உதவும்..

" நமது மாநிலத்தில் தகுதியுடைய இளைஞர்களில் 7 விழுக்காடு வரைதான் உயர்கல்வியைத் தொடரக்கூடிய நிலைமை உள்ளது. மேலை நாடுகளில் இந்த விகிதம் 80 விழுக்காடு வரை உள்ளது. 1976-77 ஆம் ஆண்டில் 1.5 விழுக்காடு என்ற நிலைமையில் இருந்த சீனா 2005 ஆம் ஆண்டில் 25 விழுக்காடு என்ற நிலைமைக்கு வந்துள்ளது. ஆகையால் தகுதியுடைய இளைஞர்களில் 7 விழுக்காடு வரைதான் உயர்கல்வியைத் தொடர முடியும் என்ற நிலையை மாற்றி 2020ஆம் ஆண்டிற்குள் 25 விழுக்காடாக உயர்த்திட இவ்வரசு பாடுபடும்"

இதுதான் உயர்கல்வி அமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வியின் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கை.பள்ளிப்படிப்பை(10 அல்லது 12) முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்கும் படிப்பைத்தான் உயர்கல்வி என்கிறோம். மேற்கண்ட அறிக்கையின்படி 100க்கு 7 மாணவர்கள்தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள். மீதியுள்ள 93 பேரின் நிலை ? ? இதில் பலர், முருகன் போன்று வேலைக்காக வாழ்க்கையை அடமானம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் எத்தனையோ இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உயர்கல்வி, குறிப்பாக தொழிற்கல்வியை கற்க விரும்புவோர் அனைவருக்கும் கல்வி வழங்க அரசானது போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படியானால் இந்த 93 பேர் கற்ற பள்ளிக் கல்வியாவது நடைமுறை வாழ்க்கைக்குப் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். எழுத, படிக்க, கணக்குப் போடத் தெரியும் இயந்திரங்களைத்தான் இன்றைய தொடக்கக் கல்வி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. ஆங்காங்கு நல்லாசிரியர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் எழுத, படிக்க, கணக்குப் போடத் தெரியும் இயந்திரங்களாகத்தான் பள்ளியை விட்டு வெளிவருகிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தை மற்றும் குறை சொல்ல முடியாது. பெற்றோர்களின் ஈடுபாடு,ஊடகங்களின் பங்களிப்பு(?) போன்ற பல்வேறு காரணங்கள் கொண்ட சிலந்தி வலைப் பிரச்சனை இது.

ஆக, பள்ளிக் கல்வி, உயர்கல்வியின் நிலை இது.

அடுத்தது, கல்வி கற்ற அனைவரும் சுயமாய் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்று எப்படியுள்ளன ? நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கும் விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்று முத்திரை குத்தியாயிற்று. பள்ளி, கல்லூரி படித்து முடித்து வருவோரில் மிகச் சிலரே விவசாயம் செய்ய முன் வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். விவசாயம் வளம் கொழிக்கும் தொழில் என்ற நிலையை அடைவதற்கான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். சுயமாய் தொழில் தொடங்க வரும் இளைஞர்களை, குறிப்பாக கிராமத்து இளைஞர்களை அரவணைத்து, பயிற்சியளித்து வங்கிகள் கடனுதவியளிக்க வேண்டும். உலகளவில் தேவையான, நம்மூரில் தயாரிக்க வாய்ப்புள்ள பொருட்களைக் கண்டறிந்து தயாரித்து ஏற்றுமதி செய்யவேண்டும். ஆக, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்தெடுப்பதும், சுயமாய் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுமே அரசின் முக்கியக் கடமையாகிறது.

உரையாடல் முடிந்து விடைபெறும்போது முருகனிடம் கேட்டேன்....இப்போது சொல்லுங்கள் நீங்கள் முதலமைச்சரானால் செயல்படுத்தும் முதல் திட்டம் "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதா?"
இல்லை வேறு ஏதேனும் உண்டா?

" பள்ளிகள் வாழ்க்கைக்கான கல்வியைத் தரணும்.
வங்கிகள் வளர்வதற்கான வழியைத் தரணும்.
சொந்தக் காலில் நின்று - மக்கள் முன்னேறனும்...."


இதுதான் நான் செயல்படுத்தப் போகும் முதல் திட்டம் என்றார்...... முதலமைச்சர் முருகன்

0 Comments:

Post a Comment

<< Home