Senthil Arumugam's blog

Tuesday, September 26, 2006

மகா சக்தியும் மக்கள் சக்தியும்

செந்தில் ஆறுமுகம்

தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் "இலவசங்கள்" அடை மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறது. "தமிழர் திருநாளாம் பொங்கலன்று தமிழர்கள் தன்மான உணர்வு பெற்றிட" இலவச வேஷ்டி, சேலை."ரோட்டுக்கடை டீயை விடக் குறைந்த விலையில்" அரிசி. "பொதுஅறிவு பெற" வண்ணத் தொலைக்காட்சி. "விறகடுப்பு புகையில் கண்ணீர் சிந்தும் ஏழைத் தாய்மார்களுக்கு" இலவச கேஸ் மற்றும் சிலிண்டர். "டிராக்டர்கள் வாங்கி விவசாயம் செய்து வந்தவர்கள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும்" கூட்டுறவு வங்கி விவசாயக் கடன் தள்ளுபடி. விவசாயிகளுக்கு இருப்பது போல் நெசவாளிகளுக்கும் இலவச மின்சாரம். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.10000லிருந்து ரூ.15000ஆக உயர்வு. கர்ப்பிணி ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு உதவித்தொகை. ஏழைக் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.500லிருந்து ரூ.1000ஆக உயர்வு, எல்லா சமுதாய மக்களுக்கும் இது வழங்கப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.150-ரூ.300. "தமிழ் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு" வரிச்சலுகை. ( எனக்கு நினைவிற்கு வந்தது இவ்வளவுதான்.... இன்னும் பல இருக்கலாம்.)

அடேயப்பா... இலவசங்களைப் பட்டியலிடவே ஒரு புத்தகம் போட வேண்டும் போல. அடுத்து வரும் அரசாங்கங்கள் இலவசமாய்க் கொடுப்பதற்கு எதுவுமில்லையே என்ற கவலையில் "இலவசமாய் எதைக் கொடுக்கலாம்?" என்ற போட்டி நடத்தி புதிய "இலவசத் திட்டங்களைக்" கண்டுபிடிக்கக்கூடும் . யார் கண்டது....

அரசின் வரிப்பணம் இப்படி அனாவசியமாகச் செலவிடப்படுகிறதே என்று உங்களைப் போல் எனக்கும் ஆதங்கம், ஆத்திரம் வந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று நம்மில் பலர் யோசித்திருப்போம். அந்நியரின் "அடக்குமுறை" ஆட்சியை எதிர்த்தது போல் கடந்த பல ஆண்டுகளாய் நடந்த ஆட்சிகளின் "சலுகைச் சித்தாந்தங்களை" ஒழிக்க வேண்டும் என்று உங்களைப் போல் எனக்கும் தோன்றியது.

எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இலவசங்கள், சலுகைகள், மானியங்களை எப்படி ஒழிப்பது ?

இலவசங்களைக் கொடுக்காதே, மக்களை மயக்காதே, தமிழா..உன் தன்மானத்திற்கு இது அவமானம். என்று கோசம் போட்டுக் கொடி பிடிக்கலாமா என்றால் கேட்போர் யாருமில்லாமல் எத்தனை நாள்தான் கத்துவது....?

இலவசங்களைக் கொடுக்காதே என்று அரசிடம் மனு கொடுக்கலாமா என்றால் தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பமுடியுமா.....?

நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கலாமா என்றால் அரசின் "கொள்கை"(கொள்ளை என்று கூடப் படிக்கலாம்) முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.

தீவிரத் தன்மையுடையவர்கள் ஆக்ரோஷத்தோடு சொல்வார்கள், இலவசங்கள் தருவோரைச் சுட்டுவிடலாம் என்று. இலையைக், கிளையை ஒடிப்பதன் மூலம் மரத்தை வேரோடு சாய்த்து விடலாம் என்பது சாத்தியமா

?அப்படியானால் நம்மால் எதுவுமே செய்யமுடியாதா? முடியும். நம்மால் முடியும்.

இலவசத் திட்டங்களுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. இந்தப் பணம் அரசுக்கு எப்படி வந்தது. இதனை எப்படியெல்லாம் முதலீடு செய்தால்... கவனிக்கவும் "முதலீடு செய்தால்",

* மக்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளையும், வளர்ச்சியையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றும்

*பள்ளிகள்,கல்லூரிகள்,மருத்துவமனைகள்,சாலைகள்,குடிநீர்,தெருவிளக்குகள்,தொழில்கள் போன்ற பொதுக்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும்

மக்களிடம் நாம் எடுத்துச்சொல்லி நம்மால் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தால் இலவசத் திட்டங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்குப் பயனில்லாத எந்த "கவர்ச்சித்" திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவும் கிடைக்காது; ஓட்டும் கிடைக்காது.

அதாவது "இலவசங்கள் வேண்டாம்" என்று மக்களே சொல்லுமளவுக்கு அவர்களை மனமாற்றம் அடையச் செய்வதுதான் ஒரே வழி என்று தெரிகிறது.

சரி.."இலவசங்கள் வேண்டாம்" என்ற மனமாற்றத்தை அடையச் செய்வது எப்படி? (இது ஒரு சிக்கலான, தமிழக ஏன் இந்திய அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்க்கும் ஒரு முயற்சியாகும். இதில் எனக்குத் தோன்றிய ஒரு சிறு செயல்திட்டத்தை உங்கள் முன் விவாதத்திற்கும், சிந்தனைக்கும் வைக்கிறேன்.)

முள்ளை முள்ளால் எடுப்பது போல இலவசத் திட்டங்களில் ஒன்றான இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் இணைப்புத் திட்டத்திலேயே நம் செயல்திட்டத்திற்கும் கரு இருக்கிறது.

"கேஸ் சிலிண்டர் மூலம் நம் செயல்திட்டத்தை செயலாய் (வெடிக்க) வடிக்க முடியும்.

"வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2kg கேஸ் சிலிண்டர் ஒன்றின் உண்மையான விலை ரூ.420. ஆனால் நமக்கு விற்கப்படும் விலையோ ரூ.290. பற்றாக்குறையான ரூ.130 அரசு மானியம் மூலம் சரிகட்டப்படுகிறது. சாதாரண மக்கள் முதல் கோடிஸ்வரர் வரை பயன்படுத்தும் இந்த கேஸ் சிலிண்டர் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே விலையில் மானியத்துடன் வழங்கப்படுகிறது.

இலவசங்கள் தருவது, மானியம் தருவது போன்றவை சரியான கொள்கைகள் அல்ல என்று பேசுகிற நாம் அனைவரும் நமது வீடுகளில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இந்த மானியத்தைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு சிலிண்டரிலும் மானியமாக ரூ.130 பெறுகிறோம். பொருளாதார வசதியுள்ள, பொதுநலனில் அக்கறையுள்ள மக்கள் இதனைப் புறக்கணிப்பதன் மூலம் புதியதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியும். மாதம் ஒரு சிலிண்டர் உபயோகப்படுத்தும் வீடுகளுக்கு இந்த புறக்கணிப்பு தங்கள் மாதச் செலவில் ரூ.130ஐத்தான் அதிகரிக்கும். இரண்டு மாதத்திற்கொரு சிலிண்டர் உயயோகிப்போருக்கு மாதச் செலவு அதிகரிப்பு ரூ.65தான். சமூக அக்கறையுள்ள, பொருளாதார வசதி படைத்தவர்கள் கோடிக்கணக்கான ஏழை மக்களின் நலம் கருதி இதனை விருப்பத்தோடு ஏற்று செயல்படுத்த முன்வருவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆக, ஒவ்வொரு கேஸ் சிலிண்டரிலும் தரப்படும் மானியமாகிய ரூ.130 எங்களுக்கு வேண்டாம் என்று மக்களைச் சொல்ல வைப்பதே நம் செயல்திட்டத்தின் முக்கிய அம்சம்.

இதற்கு, பொதுநலவாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள் செய்யவேண்டியதென்ன ?

கேஸ் சிலிண்டர் மானியத்தை புறக்கணிப்போம். சிலிண்டரை உண்மையான விலைக்கே வாங்குவோம், என்பது பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடத்தி, யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணைய விரும்புகிறார்கள் என்ற தகவலைத் திரட்டி அரசிடம் முறையிட்டு உண்மையான விலைக்கு சிலிண்டர் வாங்க விரும்புவோர்க்கு அதற்கான வசதியைச் செய்துதருமாறு வற்புறுத்தலாம். ( பல்வேறு சட்ட சிக்கல்களைக் காரணம் காட்டி அரசாங்க அதிகாரிகள் தட்டிக் கழிப்பார்கள். மக்கள் சக்தியின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் எல்லா சட்டச் சிக்கல்களுக்கும் வழி கிடைக்கும். அந்த சட்ட சிக்கல்கள், அரசின் நடைமுறைகளுக்கு இப்போது போக வேண்டாம். இலட்சக்கணக்கான மக்கள், அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் திட்டமொன்றை முன்வைத்துப் போராடும்போது அரசு பணிந்துதான் ஆகவேண்டும்.)

இத்திட்டத்தில் இணைந்தோர் பட்டியலைத் தொடர்ச்சியாக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில், இணையத்தில் புகைப்படத்துடன் வெளியிடலாம். வித்தியாசமான செய்தியாதலால் நன்கு பரவும்.

இப்படிச் செய்வதனால் என்ன பயன்?

1. மக்கள் "மானியங்கள் வேண்டாம்" என்கின்றனர் என்ற செய்தி ஊடகங்கள் மூலம் ஆட்சியாளர்களைச் சென்று சேரும்.

2. நமது செயல்திட்டம் செயல்படுத்தப்படும் வீரியத்தைப் பொருத்து ஆட்சியாளர்களின் "இலவசத் திட்டங்கள்" வரும் காலங்களில் குறையலாம்; நிறுத்தப்படலாம்.

3. தேர்தல் அறிக்கைகள் மக்களின் வளர்ச்சி சார்ந்து இல்லாவிட்டால் ஆட்சிக்கு வர முடியாது; ஆட்சிக்கு வந்தபின்பு ஆட்சி கொள்கைகள் தேர்தல் அறிக்கையின்படி இல்லாவிட்டால் திரும்பவும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற சிந்தனை அரசியல் கட்சிகளிடம் விதைக்கப்படும்.

4. ஒத்த கருத்துள்ள மக்கள் சக்தியை ஒன்றிணைக்க முடியும்

5. அடித்தட்டு, நடுத்தர மக்களிடம் "இலவசம் வேண்டாம்" என்ற மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

அடித்தட்டு,நடுத்தர பொதுமக்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம். உயர்-நடுத்தர,மேல்தட்டு மக்கள்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும். இவர்களின் பொருளாதார பலமும், கல்வியும், சமூக அக்கறையும், சமுதாய அந்தஸ்தும் இதுபோன்ற எளிமையான பொதுநலத் திட்டங்களில் தானாக முன்வந்து ஈடுபடத் தூண்டும். அதுவும் தகவல் தொழில்நுட்பத்துறை, தொழில்கள் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ள தமிழகத்தில், இத்துறைகளில் பணிபுரிபவர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்தோடு ஒத்துழைத்து ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.நடுத்தர குடும்பங்களிலும் கொள்கைப் பிடிப்போடு வாழ்பவர்களும் முன்வரக்கூடும்.

முதலில், இவ்வாறு இலட்சக்கணக்கான மக்களை "மானியம் வேண்டாம்" என்ற செயல்திட்டத்தில் சேர்த்து, ஊடகங்கள் மூலம் செய்தியைப் பரவலாக்க வேண்டும். பிறகு நாம், அடித்தட்டு, நடுத்தர மக்களிடம் இலவசங்கள், மானியங்கள் பற்றிய பிரச்சாரத்தை துவக்கவேண்டும். ஒவ்வோரு மட்டத்திலும் உள்ள மக்கள் தங்களுக்குத் தரப்பட்டுவரும் இலவசங்களை தாங்களே வேண்டாம் என்று சொல்லும் வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டும்.

ஆங்கிலத்தில் "Walk the Talk"( நீங்கள் சொல்வதை, செயலில் காட்டுங்கள்) என்பார்கள். இலவசத் திட்டங்கள் நாட்டின் பொருளாதரத்தை சீரழிக்கிறது. மக்களின் தன்மான உணர்வை, உழைப்பதற்கான உத்வேகத்தை குறைக்கிறது என்று ஆதங்கப்படும் நாம் இதுபோன்றதொரு செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டு களம் இறங்கினால்தான் விடிவு வரும்.

"இலவசங்கள்,மானியங்கள்,சலுகைகள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்வது, அதற்காக செயல்படுவது மட்டும் நமது இறுதி இலக்காக இருக்க முடியாது. இலவசங்கள் எதுவும் தரமாட்டோம்.அதோடு, வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஒரு அரசு சொன்னால் விட்டுவிட முடியாதல்லவா... ஆக, இலவசங்கள் என்பது ஒரு அறிகுறி. அதுவே நோயல்ல. கை,கால் வலிக்கும்; இது அறிகுறி. ஆனால் உண்மையான நோய்க்குக் காரணம் ஏதாவது வைரஸ் கிருமிகளாகவிருக்கும். உண்மையான நோய் என்பது அரசியல் கட்சிகள் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி செய்கின்றனர் என்பதுதான். அரசின் கொள்கைகள் எனும் நோயை "இலவசங்கள்" போன்ற அறிகுறிகளின் மூலம் கண்டறிந்து மக்களிடம் எடுத்துச் சொல்வதும்; இந்த அறிகுறிகளையே நோயைச் சரி செய்யும் ஆயுதமாக்கும் ஒரு சிறு செயல்திட்டம்தான் மேலே முன்வைக்கப்பட்டது.நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து, நோயைக்குணப்படுத்த விரும்பும் மக்களை ஒன்றிணைத்து, உரத்த குரலில் நம் கருத்தைச் சொல்வதுதான் நம் பணித்திட்டம். நோயைச் சரி செய்ய வேண்டிய மருத்துவர் "ஓட்டுக்கள் எனும் மகா சக்தியைக் கையில் வைத்துள்ள".... மக்கள் சக்தியே."

20-september-2006

0 Comments:

Post a Comment

<< Home