Senthil Arumugam's blog

Tuesday, August 29, 2006

விளாத்திக் குளங்களுக்குத்தேவை குளங்கள்

- செந்தில் ஆறுமுகம்

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுக்காவிலுள்ள பல கிராமங்களைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. விளத்திக்குளத்திற்குச் செல்ல கோவில்பட்டியிலிருத்து ஒரு மணிநேரப் பேருந்துப் பயணம். சுமார் 30 நிமிட பயணத்திற்குப் பிறகு விளாத்திக்குளம் ஊர் வரும் வரை கண்களில் பட்ட காட்சிகள் என்னுள் பல கேள்விகளை எழுப்பின. கிட்டத்தட்ட 15 கி.மி தூரத்திற்கு வழியெங்கும் இருபுறங்களிலும் ஒரே "பசுமை". ஆனால் வேதனையான விஷயம் என்னவெனில் இத்த பசுமையைத் தந்து கொண்டிருந்தது அங்கிருந்த வேலிக்கருவை(இதனை "சீமைகருவேலை" என்றும் "வேலிக்காத்தான்" என்றும் அழைப்பர்கள்) முட்செடிகள்,மரங்கள்,!!

மேலும் விசாரித்த போது சொன்னார்கள்,விளத்திக்குளம் தாலுக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் வரை இந்த முட்செடிகள் தான் விவசாயம் என்று.என்னுள் கேள்விகள் பல எழுந்ததற்குக் காரணம் என்னவெனில், இந்த வேலிக்கருவை முட்செடி நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை.மேலும் இந்த செடியுள்ள இடத்திலிருந்து சில அடிதூரம் வரை மற்ற செடிகளை வளர விடாது என்று கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. அது உண்மைதான் என்று உள்ளுர் மக்கள் சொன்னார்கள்.

சரி,இந்த முட்செடிகளை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் விவசாயம் செய்கிரார்கள் என்று விசாரித்தேன்.தண்ணீர் எதுவும் ஊற்றாமல் தானே வளரும் இந்த முட்செடிகளை 2 வருடத்திற்கு ஒருமுறை அறுவடை செய்வார்களாம்.வெட்டிய முட்செடிகளை எரித்து கரியாக்கி அந்தக் கரியை விற்பனை செய்கிறார்களாம். "காசைக் கரியாக்குவதை" கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு கரியைக் காசாக்கிக் கொண்டுள்ளார்கள்.1 ஏக்கர் நிலத்தில் வளரும் வேலிக்கருவையிலிருந்து 5 முதல் 6 டன் வரை கரி கிடைக்குமாம். ஒரு டன் கரி ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்குமாம்.1 ஏக்கரில் செடி வெட்டு கூலி போன்ற எல்லா செலவுகளும் போக கையில் நிற்பது கிட்டத்தட்ட் ரூ.1500 தானாம். அதாவது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ரூ.1500 கிடைக்கிரது!! வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.750 வருமானம்!

கரியைக் காசாக்கும் இத்த நடைமுறையை எப்படியெல்லாம் பார்க்கலாம்?

நிலத்தை பண்படுத்தாமல்,உரமிடாமல்,நாற்று நடாமல்,களையெடுக்காமல், பூச்சிமருந்து அடிக்காமல் மக்களுக்கு ஏதோ இந்த இந்தத் தொகையாவது கிடைக்கிறதே என்று பரிதாபப் பார்வை பார்ப்பது ஒருவகை.

ஆண்டவன் அவர்களுக்குப் படியளந்தது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசுவது ஒருவகை.

தண்ணிர் வசதி இல்லை. அதனால்தான் நிலங்கள் இப்படி கிடக்கின்றன என்று சப்பைக் கட்டு கட்டி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வது ஒரு வகை.

இந்தப்பார்வைகள் எதுவும் நம் முன்னேற்றத்திற்கோ,நாட்டு முன்னேற்றத்திற்கோ பயனளிக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் இத்தனை ஆண்டுகாலம் நாம் இப்படியே இருந்ததால்தான்; அந்த வறண்ட நிலங்கள் போல நாம் அணுகுமுறையிலும் வறட்சி இருந்ததால்தான் விவசாயம் நடக்க வேண்டிய நிலங்களில் முட்செடிகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டு அரசியல் போல! தரிசு நிலங்களை உருவாக்குவதில் வேலிக்கருவை முட்செடிகளின் பங்கு முக்கியமானது.

இவ்விடத்தில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சி அறிவிக்கும் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் அளிக்கும் திட்டத்தைப் பற்றி ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.தேர்தல் வாக்குறுதியின் முழு வடிவமும் என்னவெனில்:" - தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்- புன் செய் நிலங்களையும் தரிசு நிலங்களையும் முறையான விளைச்சல் நிலங்களாக மாற்றிட நுண்ணிய நீர்ப்பிரி முகடு வேளாண்மை போன்ற (Miro Watershed management) புதிய தொழில் நுட்பங்களைக் கையாள்வதறகு வழிவகை காண்போம் "தரிசு நிலங்கள் பண்படுத்தி வழங்கப்படும் என்பதே வாக்குறுதி. அதாவது தற்போதுள்ள நிலங்களை அப்படியே கொடுத்தால் பயனில்லை என்பது தெளிவாகிறது."புதிய தொழில் நுட்பங்கள்" கையாளப்படும் என்றும் சொல்லப்பட்டது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய திட்டம்தான்;அணுகுமுறைதான்.இந்த 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை அரசு பண்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? பண்படுத்திய நிலங்கள் பயன்பாட்டிற்கு வர எவ்வளவு காலம் ஆகும்? 2 ஏக்கர் கொடுக்கப்படுமா? கொடுக்கப்படாதா? என்ற துணைக் கேள்விகளை பின்னர் கேட்போம். தற்போது அதில் சிக்கி முக்கியக் கேள்வியை நாம் மறந்துவிடக்கூடாது.சரி அந்த முக்கிய கேள்விதான் என்ன?'

அந்த 65 இலட்சம் ஏக்கர் நிலம் தரிசு ஆனதேன்?'

இப்போது முக்கியக் கேள்வி தொடர்பான சில துணைக்கேள்விகளைக் கேட்போம்.

* இதுவரை விவசாய ஆராய்ச்சிகளுக்கு அரசால் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? அதனால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயர்ந்தது?

* கடந்த பல ஆண்டுகளில் மூடப்பட்ட, அசுத்தப்படுத்தப்பட்ட, ஆக்ரமிக்கப்பட்ட "பழைய தொழில் நுட்பங்களான" ஏரிகள், குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

* கடந்த பல ஆண்டுகளில் திறக்கப்பட்ட அணைக்கட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?.

*இதுவரை தரிசு நில மேம்பட்டுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் யாவை? செலவிடப்பட்டத் தொகை எவ்வளவு? அதன் பயங்கள் என்ன?.என்று கிராம நலனில்,நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும். படித்தவர்கள், அறிவாளிகள் கேட்க வேண்டும். விவசாய சங்கங்கள் கேட்க வேண்டும் குறிப்பாக அறிவும்,ஆற்றலும் ஒருங்கே பெற்ற இளைஞர்கள் கேட்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் மேற்சொன்ன அனைத்துத் தகவல்களையும் நாம் பெற முடியும். இத்தகைய தகவல்கள் கேட்கப்படும் போதுதான் அறிவிக்கப்பட்ட திட்டத்தை, கொள்கையை அமுல்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அக்கறை அதிகரிக்கும்.

விளாத்திக்குளத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் அன்று பாடினார் :

"வங்கத்தில் ஒடிவரும் நிரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்!"

அவர் இன்று தமிழகத்தை சுற்றிப்பார்த்தால்

"உள்ளுரில் பெய்யும் மழை நீரையும்
கடலில் கடக்கும் தண்ணீரையும்முதலில் சேமிப்போம்"

என்று பாடியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.பெயரில் குளம் இருந்தாலும் ஊரில் வறட்சிதான். விளாத்திக்குளங்கள் முன்னேறத் தேவையானது பத்திரிக்கைகள், தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களல்ல. உள்ளூரில் நிலத்தில் தோண்டப்படும் குளங்கள் தான்.
செந்தில் ஆறுமுகம்
ஆகஸ்ட்- 2006

வேலிக்கருவை தொடர்பான பிற தகவல்கள்:

1. வேலிக்கருவை அழிக்க புறப்பட்ட திட்டங்கள்1996 - 2001 வரை ஆட்சி செய்த தி.மு,க. அரசாங்கம் ஒவ்வொரு 50 ஏக்கர் நிலங்களிலும் முள் எடுத்து சுத்தப்படுத்தி, அரசு செலவில் மண் ஆய்வு செய்து அதன் தன்மைக்கேற்ப மரக்கன்றுகள் என்று தருவோம் என்று தெரிவித்தது.2001 - 2006 வரை ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசாங்கம் பொறுப்புக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் இந்த முட்செடிகள் அகற்றப்படும் என்றும் முட்செடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளும், பழத்தோட்டங்களும் அமைக்கப்படும் என்று அறிவித்தது.

2. வேலிக்கருவை (அ) வேலிக்காத்தான் தழிழகத்துக்கு வந்தது எப்படி? பரவுவது எப்படி?1960களில் இந்த விதைகள் மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு விமானம் மூலம் தமிழகத்தின் வறட்சியான பகுதுகளில் தூவப்பட்டது. அப்போது வளர்ந்த இச்செடிகள் அன்றைய தினம் எரிபொருளாகவும், கரி உற்பத்திக்கும் பயன்பட்டதென்னவோ உண்மை. ஆனால் இன்றைக்கு பல்வேறு விதமான கரிகள், எரிபொருட்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், இச் செடி அவசியமில்லாமல் போய் சுமார் 25 வருடங்களாகிவிட்டன. இந்த செடி பரவும் விதம் சுவாரசியமானது.இந்த முட்செடிகளின் காய்களை சாப்பிட்டு விட்டு ஆடுகள் போடும் புளுக்கைகள் மூலம் இது பல இடங்களில் வளர்ந்து விடுகிறது.

நன்றி : சாவித்திரி கண்ணனின் "கண்டதும் கேட்டதும்"

3 Comments:

  • At 8/29/2006 09:57:00 AM, Anonymous Anonymous said…

    Dear Mr.Santhil
    Read your blog about Vilathikulam's velikkaathanin kodumai. This is a very old pathetic story of Vilathikulam area. For your informaion many agriculturists are migrating to towns, since they cant do any agriculture due to this velikkaathan. nanry - Mallappan

     
  • At 10/07/2010 02:57:00 AM, Blogger தமிழ் தகவல்மையம்(மும்பை) said…

    அவர்கள் எதுக்காக போனார்கள் என்றால் அங்கு விவசாய விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடிவதில்லை, அதனால் அவர்கள் சென்று விட்டார்கள். அதாவது நமது விரலினாலேயே கண்ணை குத்தி கொண்டு, கையை விரலை மட்டுமல்ல கையையே வெட்டிகொண்ட கதையாக இருக்கிறது.
    இன்று அநேகமாக இரண்டாம் தலமுறைகள் தங்களது கிராமத்தையே மறந்து விட்டனர். கைகொடுங்கள், வேலிக்கருவை அகற்றுவோம், மீண்டும் கிராமத்தை உயிர்ப்பிப்போம்
    நன்றி சரவணா மும்பை

     
  • At 10/07/2010 02:57:00 AM, Blogger தமிழ் தகவல்மையம்(மும்பை) said…

    அவர்கள் எதுக்காக போனார்கள் என்றால் அங்கு விவசாய விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடிவதில்லை, அதனால் அவர்கள் சென்று விட்டார்கள். அதாவது நமது விரலினாலேயே கண்ணை குத்தி கொண்டு, கையை விரலை மட்டுமல்ல கையையே வெட்டிகொண்ட கதையாக இருக்கிறது.
    இன்று அநேகமாக இரண்டாம் தலமுறைகள் தங்களது கிராமத்தையே மறந்து விட்டனர். கைகொடுங்கள், வேலிக்கருவை அகற்றுவோம், மீண்டும் கிராமத்தை உயிர்ப்பிப்போம்
    நன்றி சரவணா மும்பை

     

Post a Comment

<< Home