Senthil Arumugam's blog

Thursday, May 03, 2007

மனமிருந்தால் மார்க்கமுண்டு : தமிழக மதுவிலக்கு வரலாறு



மதுவிலக்கு சாத்தியமா? என்கிற விவாதம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஆளும் கட்சியான தி.மு.கவிற்கும் பட்டிமன்றம் போல் பரபரப்பாக நடந்துவருகிறது.

பக்கத்து மாநிலங்களில் மது விற்பனையாகிறது; கள்ளச்சாராயம் பெருகிவிடும்; மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும் போன்ற அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லி மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிறது தி.மு.க ?

மதுவிலக்கு சாத்தியமே. 6 மாதம் போலீஸ் துறையை எங்களிடம் கொடுத்துப் பாருங்கள் செய்து காட்டுகிறோம்; குஜராத்தில் மதுவிலக்கு அமுலில் இருந்தும் மக்கள் நலத்திட்டங்கள் நன்றாகத்தான் நிறைவேற்றப்படுகிறது என்கிறது பா.ம.கா.

மதுவிலக்கு சாத்தியமா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லுமுன்னர் இன்று ஏன் இது விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது என்ற கேள்வி பலருள் எழலாம். ஏதோ உடலுழைப்புத் தொழிலாளிகள் களைப்பு தீர கொஞ்சம் குடிக்கிறார்கள். இதனால் என்ன "குடியா முழுகிப் போகிறது" என்று கூட சிலர் கேட்கலாம். இப்படிக் கேட்பவர்களுக்கு இந்த புள்ளிவிவரம் பிரச்சனையின் ஆழத்தைப் புரியவைக்கும்.

1983ல் மதுபான விற்பனை ரூ.139 கோடி.
2005-2006ல் மதுபான விற்பனை ரூ.7335 கோடி.
22 வருடங்களில் 52 மடங்கு வளர்ச்சி.
வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு வளர்ச்சி.

குடி முழுகித்தான் போய்விடுமோ என்ற கவலை வருகிறதுதானே?

சரி... என்னதான் செய்வது ?

மதுவிலக்கு என்பது இன்றோ, நேற்றோ பேசப்படும் விஷயமல்ல. கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான இந்த விஷயத்தில் வரலாறு என்ன சொல்கிறது என்று பார்த்தால் நமக்கு புதிய வழிகள் புலப்படும். மதுவிலக்கு வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

மதுவினால் ஏற்படும் சமூகப்,பொருளாதார பாதிப்புகளை உணர்ந்த காந்தியடிகள் சுதந்திரப்போராட்டத்தின் முக்கிய அங்கமாக, கள்ளுக்கடை மறியலை முன்னிறுத்தினார். நிர்மாணத்திட்டத்திலும் இது முக்கிய இடம் பெற்றது. 1931ல் அன்றைய சென்னை மாகாணத்தில் நடந்த 9000 சாராயக்கடைகளுக்கான ஏலத்தில் 6000த்திற்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுக்க ஆட்கள் வரவில்லை என்பதிலிருந்து காந்தியடிகளின் பிரச்சாரம் எந்த அளவிற்கு மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை உணரலாம். மதுவால் அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்கள் என்பதால், அவர்களின் தலைமையிலேயே மதுவிலக்கு பிரச்சாரம் நடத்தப்படவேண்டும் என்ற யுக்தி நல்ல பலனைப் பெற்றுத் தந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் எப்போது நிறுத்தப்படும் என்று நிருபர்கள் கேட்டதற்கு அண்ணல் காந்தியடிகள் "...அது ஈரோட்டிலிருக்கும் கண்ணம்மையையும், நாகம்மையையும் கேட்கவேண்டும்" என்றார். நாகம்மை பெரியாரின் துணைவி. கண்ணம்மை பெரியாரின் சகோதரி.

மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது சொந்த தோட்டத்தில், அரசு அனுமதியின் பேரில் கள் இறக்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். துணைவியார், சகோதரி, பெரியார் என்று ஒட்டு மொத்த குடும்பமே மதுவிலக்கிற்காகப் பாடுபட்டது.

காந்தி வழி வந்த இராஜாஜி, 1937இல் தமிழக முதலமைச்சராகப் பெறுப்பேற்றதும் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவந்தார். முதன்முதலில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டது. அப்போதைய கவர்னர், மதுவிலக்கை அமுல்படுத்தினால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும்; அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்தார். அப்போதும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்று யோசித்தாரே தவிர மதுவிலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப்பிறகு "விற்பனை வரி" என்ற புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது குடிப்பழக்கம் நின்று போனால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும். அதனால் மக்களின் வாங்கும் சக்தி பெருகும். இதனால் விற்பனை வரி வசூலும் அதிகரிக்கும் என்பதுதான் திட்டம். இன்னும் சொல்லப்போனால், 1917ல் ராஜாஜி அவர்கள் சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோதே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து மதுக்கடைகளை மூடவைத்தார். மதுவிலக்கிற்கு சிறப்புச் சட்டம் எதுவும் இல்லாத காலகட்டத்திலேயே அவரால் இதனைச் செய்யமுடிந்தது. மனமிருந்தால் மார்க்கமுண்டு சொல்லிக்கொண்டு மட்டும் இருந்துவிடாமல் செய்தும் காட்டினார். இரண்டம் உலகப்போரின் காரணமாக 1939ல் இராஜாஜி அரசு பதவி விலகியதும் ஆங்கிலேயர் ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.

1945ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மதுவிலக்கை அமல்படுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சி 1946ல் தொடங்கி 1949 வரையில் தொடர்ந்து செயல்பட்டு நான்கு கட்டங்களில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இந்த அரும்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது ஓமந்தூர்.ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான அரசாங்கம்.

தொடர்ந்து வந்த காங்கிரஸ் முதலமைச்சர்கள் இராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சியில்(1967 வரை) பூரண மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது.

1967ல் அண்ணா தலைமையிலான தி.மு.க. அணி ஆட்சியைப் பிடிக்கிறது. மதுவிலக்குக் கொள்கையின் தீவிர ஆதரவாளரான அண்ணா அவர்கள் பூரண மதுவிலக்கை தொடர்ந்து அமல்படுத்தினார். 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில்

"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதோடு நின்றுவிடாமல் மற்ற மாநிலங்களிலும் இது அமலுக்கு வரவேண்டும் என்று விருப்பப்பட்ட அண்ணா அவர்கள் அதே மாநாட்டில்

".....மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான திரு.காமராஜ் அவர்களுடனும் திரு.பக்தவத்சலம் அவர்களுடனும் கை கோர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுவோமென்றால் அந்த நாள் பொன்னாள். இந்த நல்ல முயற்ச்சிக்குஅந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் இசைவைத் தெரிவிப்பார்களானால் நான் பிரச் சாரம் செய்வது மட்டுமல்ல மதுவிலக்கை ரத்து செய்துள்ள மாநிலங்களில் சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து மதுவிலக்கை அமுல்படுத்தக் கேட்டுகொள்வோம். இம்முறையில் நமக்குச் சிறைத் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்." என்று அறைகூவல் விடுத்தார்.

1969ல் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டதை காரணம் காட்டியும், மாநிலத்தின் நிதி நிலைமையைக் காரணம் காட்டியும் மதுவிலக்கை ரத்து செய்து கோவையில் 1971ல் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1946லிருந்து 25 ஆண்டுகள் அமலில் இருந்த "மதுவிலக்கு" 1971ல் ரத்து செய்யப்பட்டது. கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால், 1974 இறுதியில் தமிழ்நாட்டில்
மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் படிப்படியாக மதுவிலக்கைத் தளர்த்தி கள்ளுக்கடைகள், குறைந்த போதையூட்டும் சாராயம், இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் பர்மிட் வைத்திருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையும் சரிவர செயல்படுத்த முடியாததால், மீண்டும் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த விரும்பி கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை முழுமையாக மூடினார். IMFL மட்டும் விற்பனை செய்யும் முறையை அமல்படுத்தினார்.

1987ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் "மலிவு விலை மதுவை" தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

1991ல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் "மலிவுவிலை மதுக்கடைகளை" மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டு தன் ஆட்சியைத் தொடங்கினார். அன்றிலிருந்து அக்டோபர் 2003 வரை இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) தனியார் பிராந்திக் கடைகள் மூலம் விற்கப்பட்டு வந்தன. தனியார் கடைகளை ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் பிராந்திக் கடைகளையும் அரசே(டாஸ்மாக்) எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 2003லிருந்து இன்று வரை இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(IMFL) மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனம் பிராந்திக் கடைகளை எடுத்து நடத்த ஆரம்பித்த பிறகு அரசுக்கு வரும் வருவாய் 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறது அரசு. மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு சாராய வியாபாரம் சக்கை போடு போட்டு வருகிறது தமிழகத்தில். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை விட டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை இருமடங்கு என்றால் டாஸ்மாக்
எந்தளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். காமராஜர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிகள் தொடங்கிய பெருமை பெற்றது போல் ஊர் தோறும் மதுக்கடைகள் திறந்த புண்ணியம்(!) செல்வி ஜெயலலிதாவைச் சேரும்.

இன்று பூரண மதுவிலக்கையும் செய்யாமல், தென்னை,பனைத் தொழிலாளிகளுக்கு நல்லதொரு தொழில் வாய்ப்பான கள்ளையும் தடை செய்திருக்கும் அரசின் இரட்டை நிலை நம்மை கவலையடையச் செய்கிறது.

ஆக, காந்தி தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் மதுவிலக்கிற்காக பாடுபட்டவர்கள் அனைவரும் மதுவை ஒரு பொருளாதார விஷயமாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு புத்தகம் திறக்கப்படும்போது சிறைச்சாலைக் கதவு ஒன்று மூடப்படுகிறது என்பார்கள். அதுபோல மதுப்புட்டி ஒன்று திறக்கப்படும்போது சமுதாயப் பிரச்சனை ஒன்று தலையெடுக்கிறது என்ற புரிதலோடுதான் பார்த்தார்கள். குறிப்பாக இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் என்பதனை உணர்ந்து எப்பாடு பட்டேனும் மதுவிலக்கை அமல்படுத்தித்தான்
தீரவேண்டும் என்ற மன உறுதியோடுதான் செயல்பட்டார்கள்.

இந்தப்புரிதலும், மன உறுதியும் இருந்ததால்தான் காந்தியால் மதுவிலக்கிற்காக பல்வேறு வடிவிலான போராட்டங்களை வடிவமைக்க முடிந்தது. இராஜாஜியால் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது; விற்பனை வரி என்னும் பொருளாதார இழப்பை சரிகட்டும் முறையை அறிமுகப்படுத்த முடிந்தது. பெரியார் தனது துணைவியார், சகோதரியோடு மதுவுக்கு எதிரான போர்க்களத்தில் இறங்கினார். காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு மற்ற மாநிலங்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய தான் தயார் என்றார் அண்ணா. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த முயற்சி தோல்வி கண்டும் தொடர்ந்து முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.

இன்றுள்ள சூழலில் வெறும் சட்டத்தால் மட்டும் மதுவிலக்கு சாத்தியமாகாது. காந்தி காலத்தில், மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளியிடப்பட்டது. "விமோசனம்" என்ற பத்திரிக்கையின் முதல் இதழை முழுக்க, முழுக்க இராஜாஜியே தயாரித்தார். அன்றுள்ள தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தார்கள். இன்று நமக்கு, டி.வி, ரேடியோ, எஃப்.எம், என்று எத்தனையோ மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ள சூழலில் மக்களிடம் மதுவிலக்குப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இருக்காது.

"நிதிப்பற்றாக்குறை இருப்பதைக் காரணம் காட்டி, மதுவிலக்குக் கொள்கையை நான் தளர்த்தி விட்டேன் என்றால் சாமன்ய மக்கள் குடிகாரர்களாக மாறி தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும். எனவே அரசுக்கு நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன் என்று கூறியதுடன் 'எனக்குப் பின்னால் வரும் இளைய சமுதாயத்தினரும் குடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள்" என்றார் அண்ணா.

அண்ணாவின் வழிநடக்கும் தி.மு.கவும், அ.தி.மு.கவும் மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றும் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் மனது வைத்தால் மதுவிலக்கு சாத்தியம். பா.ம.கவின் நல்லதொரு வேண்டுகோளை ஆளுங்கட்சி மனதார ஏற்றுக்கொண்டால்கூட மதுவிலக்கு சாத்தியம்.

ஆக, மதுவிலக்கு வேண்டுமென்று அரசு மனது வைத்தால் இது சாத்தியம். அரசியல் தலைவர்களுக்குத் தெளிவும், துணிவும் இருந்தால் இது சாத்தியம். ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் "மனமிருந்தால் மார்க்கமுண்டு".

April-07

2 Comments:

  • At 11/28/2007 06:25:00 AM, Blogger இளவரசன் said…

    I Came to know about this blog through 'Nammal Mudiyum'. Your blog gives the vital information,which is a must read for all people. Hope you give me a chance to work for this society.

    Thanks,
    Sasi.

     
  • At 11/28/2007 06:28:00 AM, Blogger இளவரசன் said…

    I Came to know about this blog through 'Nammal Mudiyum'. Your blog gives the vital information,which is a must read for all people. Hope you give me a chance to work for this society.

    Thanks,
    Sasi.

     

Post a Comment

<< Home