Senthil Arumugam's blog

Thursday, November 23, 2006

இளைஞர்களும் அரசியலும்...

சமீப காலங்களில் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் தான் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர் கூட்டங்களில் எதிர்காலத்தில் அவர்கள் எந்தத் துறையில் ஈடுபட விரும்புகின்றனர் என்ற கேள்வியைத் தவறாது கேட்டு வருகின்றார். கணிப்பொறி, பொறியியல் வல்லுனர், விஞ்ஞானி, தொழிலதிபர், ஆசிரியர், மாவட்ட ஆட்சியர் போன்ற துறைகளில் ஈடுபட விரும்புவதாக பல மாணவ,மாணவியர் தெரிவிக்கின்றனர்.

“உங்களில் யார் அரசியலில் ஈடுபட்டு நல்லதொரு அரசியல் தலைவராக வர விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கும்போது, வெகுசிலரே நாங்கள் அரசியல்வாதிகளாக விரும்புகின்றனர் என்று பெருமையோடு சொல்கிறார்கள். இந்த செய்தியைப் படிக்கும்போது நம்முள் ஒரு கேள்வி எழுகிறது.

”பெரும்பாலான இளைஞர்கள் அரசியலை ஏன் புறக்கணிக்கிறார்கள்?

” முடிவு செய்யப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தும் பொறுப்பாகிய மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை தங்களின் இலட்சியக் கனவாகக் காண்கின்ற இளைஞர்கள் மிகப் பலர். ஆனால் அந்தக் கொள்கைகளையே முடிவு செய்யும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதியாக விரும்புவோர் மிகச் சிலர்.ஏன் ?

ஏன் இந்த நிலை? ஆராய்வோம்.

முதலில், அரசியலை இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்களை ஆராய்வோம்.

1. அரசியல் = ஏமாற்றுதல் :

சாதாரணமாக நாம் அலுவலகங்களிலும், வியாபாரத்திலும், விளையாட்டுகளின் போதும் யாரேனும் ஏமாற்றினாலோ, குழப்பத்தை விளைவித்தாலோ, முதுகில் குத்தினாலோ உடனே நம் வாயில் வரும் வார்த்தை “இவன் அரசியல் பண்ணறான்டா..” . இது வாயிலிருந்து மட்டும் வரும் வார்த்தையல்ல. பல ஆண்டு கால அனுபவத்தின் வெளிப்பாடு.

ஆக, அதிகாரத்தை அடைவதற்காக, அதிகாரத்தின் மூலம் சொத்துக்களையும் அந்தஸ்தையும் பெருக்கிக் கொள்ள, ஏமாற்றுதல், பச்சோந்தித்தனமாக சூழ்நிலைக்குத் தக்கவாறு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுதல் போன்ற குறுக்கு வழிப் பயணங்கள்தான் அரசியல் என்று கடந்த தலைமுறை அரசியல்வாதிகள் பலர் அடையாளப்படுத்திவிட்டார்கள். எனவே, நியாயமான வழியில் செல்ல விரும்புவோர் நாம் இதில் சாதிக்க முடியாது என்று விலகிவிடுகின்றனர்.

2. சொந்த வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமே ?

மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியோ அல்லது அதுபோன்ற அரசின் எந்தப் பதவிக்கும் குறிப்பிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றால் வேலை நிச் சயம். பணி ஓய்வு பெறும்வரைக்கும் அடிப்படைத் தேவைகளை, வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால் அரசியலில் அப்படியில்லை.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவது பல்வேறு சலுகைகள் பணிக்காலத்திலும், பதவி விலகிய பின்னரும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் உள்ளாட்சி அமைப்பிலுள்ள பதவிகளுக்கு இந்தச் சலுகைகளும் கிடைப்பதில்லை. நடைமுறையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை தனது சொந்த பொருளாதாரத் தேவைகளுக்கு என்ன செய்வது என்பதற்கு தெளிவான வழிமுறை இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை.

இப்படிப்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும் போது நியாயமான வழியில் செல்ல விரும்புவோர் ஒதுங்கி நிற்பது நியாயமாகத்தான் படுகிறது. எப்படியும் வாழலாம் என்று இருப்பவர்கள் சம்பாதித்துக் கொள்ள அரசியலில் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என்று இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை.

3. பெற்றோர், சமூக ஆதரவின்மை:

இளைஞர்களின் வாழ்க்கை இலட்சியத்தை நிர்ணயிப்பதில் பெற்றோர்களும், சமூகமும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சில சமயங்களில் பெற்றோர்கள் தாங்கள் என்ன படிக்காமல், சாதிக்க முடியாமல் போய்விட்டதோ அதனைத் தங்கள் மகன்/மகள் செய்யவேண்டுமென்று அவர்கள் மீது சில ஆசைகளைத் திணிக்கின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலையில் ஏதேனுமொரு இளைஞன் தன் அப்பா, அம்மாவிடம் சென்று " அப்பா, நான் நல்லதொரு அரசியல்வாதியாக வர விரும்புகிறேன். இதுதான் என் இலட்சியம்" என்று சொன்னால் . . . உடனே அப்பாவிடமிருந்து வரும் பதில் ". . . உருப்படறதுக்கு ஏதேனும் வழியப் பாரு. . அரசியலாம், அரசியல்.. உங்கொப்பன் என்ன கோடி கோடியா சொத்து சேத்தா வச்சிருக்கான் ? இல்லை நீதான் பெரிய அரசியல் தலைவரோட வாரிசா ? இதெல்லாம் நம்மளப் போல சாதாரணமானவங்களுக்கு ஒத்துவராது . . . போய் ஏதேனும் கம்பெனியில வேலை வாங்கி நாலு காசு சம்பாதிக்கற வழியப் பாரு "”.

பற்றாக்குறைக்கு பக்கத்து வீட்டு, எதிர்த்த வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க எல்லாம் வந்து பஞ்சாயத்து பண்ணி அந்த இளைஞனின் அரசியல் கனவை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்.

4. போதிய நடைமுறை அறிவு தரப்படாமை:

கல்லூரிப் படிப்பை முடித்துவரும் மாணவ,மாணவிகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், பள்ளி, கல்லூரியில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். மொழிப்பாடங்களையும், கலை, அறிவியல் பாடங்களையும் ஓரளவிற்குக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், மீதியுள்ள வாழ்நாள் முழுவதும்தான் வாழப்போகும்( அடுத்த ஒரு 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோமே) இந்த சமூகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது; ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்கு திட்டமிடவும், திட்டங்களை செயல்படுத்தவும் அதிகாரமும், நிதி ஆதாரமும் படைத்த அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது, அதில் அரசியல்வாதிகளின் பணி என்ன? தனது பங்களிப்பு என்ன? என்பது பற்றிய தெளிவு இல்லாதவனாகத்தான் வெளிவருகிறான் இன்றைய சராசரி இளைஞன். இது இளைஞனின் குற்றமல்ல. பாடத் திட்டத்தின், பாடம் எப்படி சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதில் உள்ள குற்றம்.

ஆக, இந்த சமூகம் எப்படி இயங்குகிறது; அதில் அரசியலின் பங்கென்ன என்ற தெளிவில்லாத சராசரி இளைஞன் எப்படி அரசியலில் ஆர்வத்தோடு பங்கு பெற முன் வருவான் ?

அரசியலை இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்களை கண்டோம்.காரணங்களைக் களைவது எப்படி ? என்று இளைஞர்கள் அரசியலை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்?

1. பெற்றோர்கள்,சமூக ஆதரவு:

"அரசியல் ஒரு சாக்கடை". தன் மகன் அல்லது மகள் அந்தச் சாக்கடையை சுத்தம் செய்வதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று எண்ணியுள்ள பெற்றோர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் " நாடு இப்படிப் போகிறதே? இதை யார் சரிப்படுத்தப் போகிறார்கள்" என்று அக்கறைப் பட்டிருப்போம்? நல்ல தலைவர்கள் என்ன வானத்திலிருந்தா வரப்போகிறார்கள்? நம்மைப் போன்ற பெற்றோர்கள்தானே நம் குழந்தைகளை முன்னுதாரணத் தலைவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்? " சாக்கடை சீராக சென்று கொண்டிருந்தால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அடைத்துக் கொண்டு நாற்றம் எடுக்கும்போது யாராவது சுத்தம் செய்துதானே ஆக வேண்டும். அது பிறர் வீட்டுக்குச் செய்யும் சேவை என்றெண்ணாமல், தன் வீட்டின் சுகாதாரமும் அதில் அடங்கியுள்ளதே என்று கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓரளவு வசதியும், வாய்ப்பும் பெற்ற பெற்றோர்கள் நினைத்தால் தங்கள் மகனை, மகளை நல்லதொரு தலைவனாக வளர்த்தெடுக்க முடியும். அவர்கள் மேல் எந்த எண்ணத்தையும் திணிக்காமல், அவர்களுக்கே ஆர்வம் வரும்படியான வழிமுறைகளில் அவர்களைத் தூண்டி நாடு போற்றும் தலைவனாக வளர்த்தெடுக்க முடியும். அப்படி வளர்தெடுக்க விரும்பாவிட்டாலும், குறைந்த பட்சம் சுய ஆர்வத்தோடும், அறிவார்ந்த அணுகுமுறையோடும் அரசியலில் பங்கு பெற விரும்பும் தங்கள் மகன், மகளுக்கு முழு சுதந்திரமாவது கொடுக்க வேண்டும்.2. கல்லூரிகளில் - சமூக அறிவியல் பாடம்: தேர்தல்,அரசியல் கட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களின் பணிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் பணிகள் போன்ற “சமூக அறிவியல்-குடிமையியல்” பாடங்கள் பத்தாம் வகுப்பு வரைதான் கற்றுத்தரப்படுகின்றன. கல்லூரிகளில் இந்தப் பாடங்கள் இல்லை. ஆராய்ந்து அறியும் வயதாகிய கல்லூரிப் பருவத்தில் இப் பாடங்களைக் கொடுப்பது, இளைஞர்களின் அரசியல் அறிவை வளர்ப்பதாக இருக்கும். பொறுப்புள்ள குடிமகனாய் செயல்படுவதற்கும், ஆர்வமிருப்பவர்கள் பொறுப்புள்ள தலைவர்களாக வருவதற்கும் இது நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். கல்லூரிகளில் மொழிப்பாடங்களை கட்டாயமாக வைத்திருப்பது போல், இந்தப் பாடங்களையும் ஏன் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாது? கட்டாயப் பாடமாக வைப்பதன் நோக்கம் அதனைக் கற்றுத்தரும் முறையில்தான் பூர்த்தியாகும். ஆம், வழக்கம்போல் கேள்வி, பதில், மனப்பாடம் என்ற அடிப்படையில் இந்தப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை. சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடைமுறை உதாரணங்களோடு இந்தப் பாடங்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.

3. அரசியல் தலைவர்களை வளர்த்தெடுக்க ஒரு நிறுவனம்:

பொதுவிவகாரங்களில் ஆர்வமும், ஆழ்ந்த அறிவுமுடைய; எதிர்காலத்தில் அரசியல் தலைவனாக வர விரும்பும் ஒரு இளைஞன் தன் அறிவையும், திறமையையும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் ஏதுமில்லை.( புனேவில் இது போன்றதொரு நிறுவனம் இருப்பதாகக் பத்திரிக்கையில் பார்த்திருக்கின்றேன். ஆனால் அங்கு சென்று பணம் கட்டிப் படிப்பதற்கு நடுத்தர மக்களின் பொருளாதாரம் ஒத்துழைக்காது.) அப்படியொரு பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளிக்கலாம்.

மிகக்குறைந்த கட்டணத்தில், தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகவும் இந்த நிறுவனத்தில் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படலாம். இந்த வகுப்புகளின் மூலம் மக்களின் சமூக,பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றியும், தற்கால அரசியல் நடைமுறைகளைப் பற்றியும், அரசியல் மூலம் எவ்வாறு சமூக,பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது பற்றியும் அங்கு பயிலும் மாணவர்களிடம் தெளிவை ஏற்படுத்தலாம். தேவைப்படும், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கலாம்.

படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்கள் சிலர், விளையாட்டில் விற்பன்னர்களாக இருப்பார்கள். அவர்களை விளையாட்டைக் கற்றுத் தரும் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் திறமையை ஊக்குவிப்பது போல், பொதுவிவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து எதிர்காலத்திற்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ளலாம். இன்றைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு மனம் நொந்து, நல்லவர்கள், அறிவார்ந்த அணுகுமுறையுடையவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களா என்று ஏங்கும், வசதி படைத்தோர் இந்த பயிற்சி நிறுவனத்திற்கு உதவி செய்ய முன்வரலாம்.

இப்படி, பெற்றோர்களாலும், சமூகத்தாலும், பள்ளி, கல்லூரிகளாலும், பயிற்சி நிறுவனங்களாலும் வளர்த்தெடுக்கப்படும் ஒரு முக்கிய விஷயமாக “அரசியல்” மாறும்போது அறிவார்ந்த அணுகுமுறையுள்ள ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். இவர்கள், புதிய அரசியல் கொள்கைகள், கலாச்சாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பல்லாயிரம் இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவார்கள்; நாமெல்லாம் கனவில் தேடிக்கொண்டிருக்கும் நல்லாட்சியைத் தருவார்கள்.

பின்குறிப்பு:வருடம் 2015:செய்தி: கோவையில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பேராசிரியர் அப்துல்கலாம் மாணவர்களை நோக்கி “உங்களில் யார் அரசியலில் ஈடுபட்டு நல்லதொரு தலைவராக வர விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபோது, பெண்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கைதூக்கி ஆச்சயர்யப்படுத்தி, அசத்தினர்.

3 Comments:

  • At 10/19/2008 05:01:00 AM, Blogger VENKATESHWARAN k said…

    அரசியலும் இளைஞர்களை என்ற தலைப்பில் இருந்த உங்களது படைப்பு நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கிறது. எனினும் அதனை மீறிய யதார்த்தம் என்னவென்றால் தெரிந்த நாமும் தொடர்ந்து அரசியலை ஒதுக்குவதால் தான். நாம் மாறும்வரை சமுஉகத்தை குறை சொல்லி பயனிலை. எபோதும் அது பேச்சளவில் மட்டுமே இருக்கும்
    நன்றி.

     
  • At 6/04/2015 10:18:00 PM, Blogger Unknown said…

    மாணவர்கள் அரசியல்-க்கு வருகை தர விரும்பினால் கலாம் அதை ஏற்றுக் கொள்வரா?
    மாணவர்களுக்கு தேவையான அறிவுரை கூறுவாரா?
    அரசியலுக்கு வரும் மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடல் நடத்த தயரா?
    மாணவர்கள் தயார்!
    தொடர்புக்கு:9698093091

     
  • At 6/04/2015 10:34:00 PM, Blogger Unknown said…

    அன்புள்ள இளைய தலைமுறைக்கு வணக்கம். மாற்றம் ஒன்று மட்டும் மாறாதது. ஈரோடு பகுதியில் இயங்கி வரும் வேளாளர் மகளிர் கல்லூரியை சார்ந்த NUTRITION AND DIETITICS DEPARTMENT FINAL YEAR மாணவிகள் தங்களுடைய கல்லூரிக்குள் கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான ராசயன்ங்களை விற்க்க கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்க்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரே நாளில் சுமார் 750 மாணவிகள் இந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுள்ளனர்.மாற்றம் இளைய தலைமுறையிடம் இருந்து துவங்கி உள்ளது.இந்த முயற்சியை மனமார பாராட்டுவோம்.இதனை பார்க்கும் கல்லூரி மாணவிகள் உங்கள் கல்லூரியிலும் இதனை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
    ஒரு குளிர்பானத்தின் மூலம் வரும் தீமையை தடுக்க ஒரே நாளில் 750 மாணவிகள் ஒன்று கூடும் போது ஒரு நாட்டை பற்றிய சிந்தனை வரும் போது மட்டும் நமக்கு என்ன வந்தது என்று அனைவரும் ஒதுங்கி ஒதுங்கி ஓடி விடுகிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. நாமூம் நாள் முலுவதும் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு வருகின்றோம். நாம் வாக்களித்ததின் பயன் என்ன? .தமிழ் நாட்டில் ஒன்று இது அல்லது அது என்று 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட இரண்டு கட்சிக்கு மட்டுமே நாம் வாக்களித்து வருகிறோம்.இதனால் வாக்களித்த நாம் என்ன பயன் அடைந்தோம்.ஏன் நாம் அவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.அவர்களின் ஆட்சியில் என்ன நல்ல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன.குறிப்பிட்டு சொல்லும் எண்ணிக்கையில் ஏதவுது உண்டா? மாணவர்கள் ஏன் தேர்தலில் போட்டியிட விரும்புவதில்லை. தேர்தலில் மாணவர்கள் கலந்து கொண்டாலும் நாம் யாரும் அவர்களுக்கு வாக்களிக்க விரும்புவது இல்லை.காரணம் வாக்களித்தால் மட்டும் என்ன இவர்கள் வெற்றி பெறவா போகிறார்கள் என்று சொல்லி விடுவோம். ஒரு முறை மட்டும் தான் வாக்களித்து பார்ப்போம். கால சூழ்நிலையின் காரணமாக நீங்கள் வாக்களித்தவர் வென்று விட்டால் என்ன செய்வீர். சற்று மாராக தோல்வி அடைந்துவிட்டாலும் எப்போதும் போல அங்கு இரண்டில் யாரோ ஒருவர் வெற்றி பெறுவார்.இருந்தாலும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டும் வாக்களித்து பார்ப்போம். மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நாம்பிக்கையில் தமிழ் மண்ணாளூம் மாணவர்கள் கழகம் (TMMK) என்ற அமைப்பின் மூலம் வருகின்ற 2016-ம் ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் மாணவர்கள் போட்டியிடுகிறார்கள்.அவர்களுக்கு இந்த முறை நாம் அனைவரும் வாக்களிப்போம். தமிழ் மண்ணாளூம் மாணவர்கள் கழகம்(TMMK),தமிழ்நாடு மாணவர்கள் ஆராயிச்சி அமைப்பு(TSRO),தமிழ்நாடு அனைத்து கல்லூரி மாணவர் பாராளுமன்றம் (TACSP), இந்த மூன்று அமைப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்று இனைந்து வருகின்ற 2016-ம் ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் மாணவர்கள் போட்டியிடுகிறார்கள். நிச்சயம் நாம் அனைவரும் இந்த ஒரு தடவை இவர்களுக்கு வாக்களிப்போம்.

     

Post a Comment

<< Home